
வரும் காலத்தை வளமாக்க ஒன்றிணைவோம்
இன்னுமொரு புதிய வருடத்தை வரவேற்க உலகம் தயாராகிக்கொண்டு இருக்கிறது. அடுத்த வருடத்திற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு விட்டன. ஒரு புதிய ஆரம்பம் என்பதுபோல மக்கள் ஆவலாக உள்ளார்கள். எமது மக்களுக்குத்தான் இன்னமும் தீர்வு கிடைத்த பாடில்லை. 2009 இல் தாமாக ஒப்படைத்த உறவுகளையும், கைதாக்கப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களையும் தேடியலைந்துகொண்டே இருக்கிறார்கள் எமது பெற்றவர்களும் உறவினர்களும்.
சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 தமிழர் பிரதேசமெங்கும் கரிநாளாகக் கொண்டாடப்பட்டிருக்கிறது. அநுரகுமார ஆட்சிப் பொறுப்பில் ஏறியபின் வரும் முதலாவது மனித உரிமைகள் தினம் கரிநாளாக, பிள்ளைகளைத் தொலைத்த பெற்றோரின் அவலக் குரலாக ஒலித்தது தாக்கத்தை ஏற்படுத்தியதா இல்லையா என்பதைக்கூட அவர்கள் காட்டிக் கொள்ளவில்லை.
இது தவிர 30/12/24 அன்று, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பெயரால் நீண்டகாலமாக சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலையைக் கோரும் கையெழுத்துப் போராட்டம் ஒன்றும் மன்னாரில் நடத்தப்பட்டுள்ளது. நீண்ட காலம் சிறையில் இருந்து புனர்வாழ்வு அளிக்கப்பட்டு நீதிமன்றால் விடுவிக்கப்பட்டவர்கள் பலர் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறைகளில் வாடுகின்றனர். அவர்களை விடுவிக்கக் கோரும் முயற்சியில் மீண்டும் எமது மக்களும் மனிதநேய அமைப்புகளும் ஒன்றிணைந்துள்ளன.
எமது அரசு எந்த அரசியல் பழிவாங்கல்களையும் செய்யாது என வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர உறுதிபடக் கூறியுள்ளார். தமிழ் மக்களின் பிரச்சனைகள் நியாயமான முறையில் தீர்க்கப்படும் என்று அநுரகுமாரவும் தெரிவித்துள்ள நிலையில் புதிய அரசாங்கம் தமக்கு சரியான ஒரு பதிலைத் தரவேண்டும் என்ற மக்களின் நியாயமான கோரிக்கைக்கு என்ன பதில் கிடைக்கப் போகிறது?
அநுரகுமார தன்னைப் போலவே செயற்படுவது தனக்கு மிகுந்த மனமகிழ்ச்சியை அளிக்கிறது என்றும், தான் இடைநடுவில் விட்டு வந்த வேலைத்திட்டங்களை அவர் தொடரவிருப்பதாகவும் ரணில் விக்கிரமசிங்க பேட்டியொன்றில் தெரிவித்திருக்கிறார். தன் பாதையை அடியொற்றி அவர் நடப்பதாக ரணில் புகழாரம் சூட்டியிருப்பது தமிழர்களுக்கு மன மகிழ்ச்சியளிப்பதாக இல்லை. தமிழர்கள் விடயத்தில் ரணில் எவ்வாறு நடந்துகொண்டார் என்பது மறந்துவிடக் கூடியதா என்ன?
பயங்கரவாதத் தடைச் சட்டம் நீடிக்கப்பட்டிருப்பதும், மீண்டும் கைதுகளும் கடத்தல்களும் ஆரம்பித்திருப்பதும் ஆட்சி மாற்றத்தால் எதுவும் மாறிவிடப் போவதில்லை என்கிற எண்ணத்தை ஏற்கனவே மக்கள் மனதில் எழுப்பியுள்ள நிலையில் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பதிலை அரசாங்கம் தந்தேயாக வேண்டும். சிறைகளில் வாடும் அரசியற் கைதிகளின் விடுதலையும் உறுதி செய்யப்பட வேண்டும்.
மற்றவர்களுக்கு எப்படியோ, ஈழத் தமிழர்களுக்கு முன்னால் முடிக்க வேண்டிய பணிகள் பல விரிந்து கிடக்கின்றன. கடினமான பாதைதான். ஒன்றாக நின்று போராடினால் வெல்ல முடியாதது எதுவுமில்லை. அடுத்த சந்ததியின் வளமான எதிர்காலத்திற்காக ஒன்றிணைவோம்.