
சட்டவிரோத திஸ்ஸ விகாரை; தையிட்டியில் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் மீண்டும் இன்று ஆரம்பம்
தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்றக் கோரியும், சூழவுள்ள தமிழ்மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளை மீளவும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் மேற்படி விகாரைக்கு அருகில் மீண்டும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகவுள்ளது.
இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முழுநோன்மதி நாளான நாளை வெள்ளிக்கிழமை மாலை 6 மணி வரை தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளதாகவும் இந்தப் போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரையும் கலந்து கொள்ளுமாறும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்றக் கோரியும், விகாரைக்கு சூழவுள்ள காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு கோரி மாதம் தோறும் முழுநோன்மதி தினத்தை முன்னிட்டு தையிட்டியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.