மாணவர் சக்தி

மாணவர் சக்தி

(கொற்றவை)

மண் மட்டுமே ஒரு நாடாகாது. ஒரு தேசம் என்பது அதன் மக்களால் உருவாக்கப்பட வேண்டும். ஒரு தேசத்தை வலுப்படுத்த அதன் மக்கள் கடுமையாக உழைக்க வேண்டும். மக்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவித்து, இனவாதத்தை வளர்த்து, ஒரு இனத்தையே வாழ முடியாத நிலைக்குத் தள்ளும்போது அவர்களிடமிருந்து உயிர் வாழ்தலுக்கான எதிர்ப்புக் கிளம்புவது வாழ்க்கையின் நியதி. நாங்கள் ஒரு நல்ல விதையை விதைக்கும் போதுதான் அது ஒரு நல்ல மரமாகி நல்ல பழங்களைக் கொடுக்கிறது. அதேபோல, ஒரு நல்ல மாணவனை நாம் உருவாக்கும்போது, அவன் ஒரு நல்ல குடிமகனாகிறான். அவன் பின்னாளில் சிறந்த குடிமக்களை உருவாக்கி வளர்க்கிறான். மாணவர்கள் தான் ஒரு நாட்டின் வருங்கால வாரிசுகள். நாட்டின் முக்கிய உறுப்புகள். மாணவர்களால் ஒரு சிறந்த தேசத்தை உருவாக்க முடியும்.

யப்பான், சீனா போன்ற நாடுகள் தமது மாணவர்களை துறைசார் வல்லுனர்களாக வளர்த்து, தம்மை மனிதவள நாடுகளாக மாற்றியமைத்துக் கொண்டதன் பின்னர்தான் உச்சத்தை அடைந்திருக்கின்றன. மாணவன் என்பவன் தேசத்தின் தூணாக மட்டுமல்லாது தேசத்தைப் பாதுகாக்கும் இளம் வீரனாகவும் இருக்கிறான். தன்னலமற்ற மாணவ சக்தி எத்தனையோ தேசங்களை விடுவித்திருக்கிறது, எத்தனையோ சர்வாதிகார அரசுகளை வீழ்த்தியிருக்கிறது.

இன்று இலங்கை மக்கள் வாழ வழியற்று பட்டினிச் சாவின் விழிம்பில் நிற்கிறார்கள். ஏற்கனவே மரணங்கள் நிகழ ஆரம்பித்து விட்டன. இவை அனைத்திற்கும் காரணமானவர்கள் அரசுக்கட்டில் இருக்கும் சிங்கள அரசியல்வாதிகளே. ஊழலும், லஞ்சமும், பொய்யும் புரட்டும், அதிகார மமதையுமாக அவர்கள் வீங்கிப்போக, நாதியற்ற மக்கள் நடுத்தெருவிற்குத் தள்ளப் பட்டுள்ளனர். அரச எதிர்ப்புப் போராட்டமான ‘கோட்டா கோ கம’ மாணவர்களையும் தாங்கி வலுப்பெற்று நிற்கிறது. எந்த எல்லைக்கும் போகத்துணியும் ஒரு சர்வாதிகார அரசு மாணவர்களை மட்டும் விட்டு வைக்குமா என்ன? பல்கலைக் கழகங்களை மூடி, போராட்டத்தையும், மாணவர்கள் ஒன்று திரழ்வதையும் தவிர்க்க, சிங்கள அரசியல்வாதிகள் தமது கூலிப்படை போல் செயற்படும் காவற்துறையையும் இராணுவத்தையும் ஏற்கனவே பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.

எவ்வாறு இனி வாழ முடியாது என்ற ஒரு சூழ்நிலை ‘கோட்டா கோ கம’ உருவாக வழிவகுத்ததோ அவ்வாறு சிங்கள அரசால் தமிழ் மாணவர்களின் உயர்கல்விக்கு ஆப்பு வைக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட ‘தரப்படுத்தல்’ முறை தமிழ் மாணவர்களைக் கிளர்ந்தெள வைத்தது. ஏற்கனவே மொழிப்பறிப்பினால் பாதிக்கப்பட்டிருந்தவர்களை தரப்படுத்தல் முறை போராடத் தூண்டியது. இதன் விளைவாக 1971 சனவரியில் திரு சத்தியசீலன் தலைமையில் ‘தமிழ் மாணவர் பேரவை’ உருவாகியது. தமிழ் மாணவர் பேரவையின் பின்னால் மாணவர்கள் அணிதிரண்டனர். அரசின் அடக்குமுறைகள் அதிகரிக்க அதிகரிக்க, உரிமை கேட்டுப் போராடிய மாணவ சமூகம் அரசியலினுள் தள்ளப்பட்டது.

அவ்வாறு தமிழ் மாணவர் பேரவையில் தன்னை முழுமையாக இணைத்துப் போராடிய திரு சிவகுமாரன், அவரின் தீவிர செயற்பாடுகளின் காரணமாக சிங்கள அரசினால் தேடப்படும் ஒருவரானார். காவற்துறையிடம் அகப்படக்கூடிய ஒரு சூழ்நிலை வந்தபோது ‘சயனைட்’ எனும் கொடிய விசம் அருந்தி அவர் தன்னை மாய்த்துக் கொண்டதானது, அதன் பின்னதான ஆயுதப் போராட்டத்தில் உயிருடன் பிடிபடாதிருக்க ‘சயனைட்’ அருந்துவதன் முன்னோடியானது. இதில் நாம் ஒன்றை தெளிவாகப் பார்க்க முடிகிறது. தமது உரிமைகளை மீளப்பெற மாணவ வயதில் போராடத் தொடங்கிய ஒரு இளைய தலைமுறை, சயனைட் உட்கொண்டு தம்மை மாய்த்துக் கொள்ளும் அளவிற்குத் தள்ளப் பட்டிருக்கிறது. ஆயின், அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த அடக்குமுறையின் அளவு எவ்வளவு மோசமானதாக இருந்திருக்கும்?

1971 இல் இலங்கையின் தெற்குப் பகுதியிலிருந்து ‘ஜனதா விமுக்தி பெரமுன’ ( JVP ) யினால் அப்போதைய சிறிமாவோ அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட ஒரு ஆயுதப் புரட்சி, இந்திய, சீன அரசுகளின் உதவியுடன் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டதாக ‘மிலிரறி விக்கி’ ( military wiki ) தெரிவிக்கிறது. இந்தப் போராட்டத்தில் ஆயிரக் கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் பங்கு கொண்டிருந்தனர். அவர்கள் மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டும், சுடப்பட்டும் கடும் சித்திரவதைகளுக்கு உள்ளடக்கப் பட்டும் கொல்லப்பட்டனர். இழப்பின் தொகையை அரசு குறைத்துக் காட்டினாலும், பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் கொல்லப்பட்டிருந்தனர் அல்லது காணாமற் போயிருந்தனர்.

வேறு எத்தனையோ நாடுகளில், மாணவர்கள் செயற்பாட்டினால் நிகழ்ந்த மாற்றங்களையும், மாணவ போராட்டங்களுக்குத் தலைமை தாங்கியவர்கள் பின்னாளில் நாட்டுக்கே தலைவராகி வழிநடத்தியதையும் வரலாற்றிற் பார்க்கலாம். 1989 ஏப்ரல் 18 அன்று சீன அடக்குமுறைக் கம்யூனிச அரசை எதிர்த்து மாணவ ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்தனர். அரசின் எச்சரிக்கையையும் மீறி ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தன. இறங்கி வராத அரசுக்கு எதிராக ‘தியனன் மென்’ சதுக்கத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம் கண்ணீர்ப் புகைக்குண்டு, தடியடி என்று எதற்கும் கலைந்து போகவில்லை. இறுதியில் மாணவர்கள் மீது டாங்கிகளை ஏற்றி அவர்களை உயிருடன் அரைத்துத் தள்ளியது சீன அரசு. பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இதன்போது கொல்லப்பட்டனர். இது சீன அரசியலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு போராட்டமாகும்.

வியட்நாமில் அமெரிக்கா நடத்திக் கொண்டிருந்த போரில் பாரிய அழிவுகளைச் சந்தித்துக் கொண்டிருந்தது. இழப்பின் தீவிரத்தை மக்களிடமிருந்து மறைத்து போர்செய்யும் அமெரிக்க அரசை எதிர்த்து கென்ற் மாநிலத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்கள் மீது கண்ணீர்ப் புகைக்குண்டுத் தாக்குதல், துப்பாக்கிப் பிரயோகம் என்பன நடத்தப்பட்டன. அவசரகால நிலை பிரகடனப் படுத்தப் பட்டது. இந்த மாணவர் போராட்டத்தினால் அமெரிக்காவின் வியட்நாமிய அத்துமீறல் வெளிக்கொணரப் பட்டது.

1942 இல் ஜேர்மிய நாசி அரசாங்கத்தின் கொடூரங்களை ஜேர்மனியருக்கும் உலகுக்கும் தெரியப்படுத்துவதற்காக ‘வெள்ளை ரோஜா’ இயக்கம் நடத்தப்பட்டது. பல்கலைக்கழகங்கள் இணைந்து துண்டுப் பிரசுரங்கள் மூலம் தகவல்களை மக்களுக்குத் தெரியப் படுத்தினர். இறுதியில் மாணவ தலைவர்கள் நாசி அரசால் தூக்கிலிடப்பட்ட போதும் அவர்களின் முயற்சி வெற்றி பெற்றிருந்தது. இவ்வாறே… சோவியத் அரசாங்கம் உடைந்து போனபின்பும், கம்யூனிச செக்கோஸ்லாவாக்கிய அரசு தன்னை எதிர்ப்பவர்களைக் கடுமையாகத் தண்டித்தது. நவம்பர் 17, 1989 அன்று அமைதியான முறையில் நடத்த பேரணியை காவலர்கள் கடுமையாகத் தாக்கியதில் பலநூறு மாணவர்கள் காயமடைந்தனர். பின்னாளில் செக்கோஸ்லாவாக்கியா பிரிந்து போகவும் இந்தச் சம்பவத்தின் தாக்கம் ஒரு காரணமானது. கியூப விடுதலைப் போராளியாகவிருந்து பின்னாளில் அரசமைத்த ஃபிடல் காஸ்ட்ரோவும் ஒரு மாணவப் போராளிதான். மாணவர்கள் திரண்டால் எதனையும் சாதிக்க முடியும் என்பதற்கு உலகில் இன்னும் எத்தனையோ உதாரணங்கள் உள்ளன. அடக்குமுறைதான் தீர்விற்கான வழியையும் தீர்மானிக்கிறது. மீள முடியாத சிக்கலில் வீழ்ந்து கிடக்கும் இலங்கைப் பிரச்சனையின் தீர்வில், மாணவர்களின் பங்கு என்னவாக இருக்கப் போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )