எரியூட்டப்பட்ட யாழ் நூலகம்

எரியூட்டப்பட்ட யாழ் நூலகம்

(மகிழி)

ஒரு இனத்தை, அவர்கள் இருந்த தடயமே தெரியாமல் அழிக்க வேண்டும் என்ற குரோதமும், வன்மமும் கொண்ட எதிரி, எந்த எல்லை வரைக்கும் போவான் என்பதற்கு அடுத்தடுத்து தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளே சான்று. மக்களைக் கூட்டம் கூட்டமாகக் கொன்று குவிப்பதை மட்டும் இனவழிப்பு என்று எடுத்துக் கொள்ள முடியாது. அம் மக்களின் கலை, கலாசாரத்தை சிதைப்பது, அவர்களின் வணக்க தலங்களை அழிப்பது, அம் மக்களின் பூர்வீக நிலங்களை அபகரித்து அவர்களை நாதியற்றவர்கள் ஆக்குவது, அவர்களின் தொன்மையான வரலாற்றுச் சான்றுகளை இல்லாதொழித்து முற்றாகவே ஒரு வரலாற்றை பொய்யானதாகக் காட்டுவது என்று ஒரு இனக் கருவறுப்பின் வடிவங்கள் தொடர்கின்றன. இந்த வகையில், 31/05/1981 அன்று நள்ளிரவில் அரங்கேற்றப்பட்ட யாழ் நூலக எரிப்பானது தமிழர் வரலாற்றில் ஒரு துன்பியல் வடுவாக அமைந்து விட்டது. இனவழிப்பின் உச்சமாகப் பதிவு செய்யக்கூடிய ஒரு போர்க் குற்றமாகவும் யாழ் நூலக எரிப்பு பார்க்கப்பட வேண்டும்.

யாழ் நூலகம் உருவாக காரணகர்த்தாவாக இருந்தவர் அச்சுவேலியைச் சேர்ந்த ‘சக்கடத்தார்’ செல்லப்பா அவர்கள். 1933 நவம்பர் 11 அன்று, தனது வீட்டில் ஒருசில நூல்களுடன் அவர் ஆரம்பித்த நூலகம், 1934 இல் யாழ் மத்திய கல்லூரியில் நடந்த ஒரு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பின் பொது நூலகமாக மாற அடித்தளம் இடப்பட்டது.

சமூக ஆர்வலர்களினதும் பொதுமக்களினதும் அயராத உழைப்பு, வெளிநாட்டு உள்நாட்டு நிறுவனங்களின் தாராள உதவி என்பனவற்றுடன் யாழ் பொது நூலகத்திற்கு இடம் எடுக்கப்பட்டு புதிய கட்டடம் எழுப்பப்பட்டது. 1800கள் காலத்திய அரிய ஓலைச்சுவடிகள், கிடைத்தற்கரிய நூல்கள், வரலாற்றுச் சான்றுகள், ஆவணங்கள், நாளிதழ்கள்…. என்று கிடைத்தற்கரிய பொக்கிசங்களாக 97,000 இற்கும் மேற்பட்ட ஆவணங்கள் கொண்ட ஒரு பிரம்மாண்டமாக, தெற்காசியாவிலேயே ஒரு பெரிய நூலகமாக எழுந்த யாழ் நூலகம், தமிழர்களின் வரலாற்றுத் தொல்லியலை உலகிற்கு எடுத்தியம்பும் ஒரு மாபெரும் சான்றாக நிமிர்ந்து நின்றது.

திட்டமிட்ட ஒரு இனவழிப்பின் வெளிப்பாடாக, 31/05/1981 அன்று நள்ளிரவின் பின், சிங்கள அரச படைக் காடையர்களால் யாழ் நூலகம் எரியூட்டப்பட்டது. கிடைத்தற்கரிய பொக்கிசங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகின. கருகிப்போன நூலகம் போல உலகெங்கிலும் இருந்த அத்தனை தமிழ் நெஞ்சங்களும் இருண்டு போயின. அப்போதைய சிங்கள அமைச்சரான ‘காமினி திஸ்ஸநாயக்க’ நேரடிக் காரணகர்த்தாவாக இருந்து நூலகத்தை எரித்தார் என்ற உண்மை வெளிப்படையாக இருந்தும் எந்தச் சட்டமும் இந்த அரச பயங்கரவாதிகளைத் தண்டிக்கவில்லை.

இது ஒரு இனவழிப்புப் போர்க் குற்றம். சட்டத்தின் முன் கொண்டு வரப்பட்டு தண்டிக்கப்பட வேண்டிய குற்றம். சிங்கள அரசு இந்தப் போர்க்குற்றத்திற்கும் சேர்த்துப் பொறுப்பேற்க வேண்டும். வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால்…..

போஸ்னியா (Bosnia) தேசத்தின் செரஜாவ் (Sarajevo) நகரை ஆக்கிரமித்து இருந்த சேர்பியா (Serbia) இராணுவத்தினர், 1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 – 26 ஆம் திகதிகளில் போஸ்னிய பல்கலைக்கழக நூலகத்தை தீயிட்டுக் கொளுத்தினார்கள்.

ஏறத்தாழ இரண்டு மில்லியன் புத்தகங்கள், பழங்காலச் சுவடிகள், படங்கள் வைக்கப்பட்டு இருந்த மேற்படி நூலகம் சேர்பியா அரச படைகளால் முழுமையாக தீக்கிரையாக்கப்பட்டது.

இந்த கொடூர நிகழ்வு சேர்பியா நாட்டின் தலைவராக இருந்த Slobodan Milošević அவர்களுக்கு எதிராக பிற்காலத்தில் முன்வைக்கப்பட்ட சேர்பியர் அல்லாதோருக்கு எதிரான இனப்படுகொலை தொடர்பான குற்றச்சாட்டின் முக்கிய ஆதாரமாக சேர்க்கப்பட்டு இருந்தது.

குறிப்பாக ஐக்கிய நாடுகளை சபை நிறுவிய International Criminal Tribunal for the Former Yugoslavia (ICTY) அமர்வில், 2003 ஆன் ஆண்டு ஜூலை 8 ஆம் திகதி சாட்சியமளித்த Harvard நூலகர் Andras Riedlmayer அவர்கள், தனது சாட்சியத்தில் சேர்பியா அரச படைகள் போஸ்னியா பல்கலைக்கழக நூலகத்தை தீயிட்டு எரித்தமையை போஸ்னியா தேசம் மீதான இனப்படுகொலையின் பிரதான ஆதாரமாக பதிவு செய்து இருந்தார்.

அதே நேரம் தீயிட்டு அழிக்கப்பட்ட போஸ்னிய பல்கலைக்கழக நூலகம் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியோடு சீரமைக்கப்பட்டு, அதன் வாயிலில், ‘சேர்பியா நாட்டு படைகளால் நூலகம் அழிக்கப்பட்டது தொடர்பான நினைவு கல்’ திறந்து வைக்கப்பட்டு இருக்கின்றது.

குறித்த நினைவு கல்லில் ‘Do not Forget , Remember and Warn’ என பதிவு செய்து வைத்து இருக்கின்றார்கள்.

யாழ் நூலக எரிப்பிற்கும் பொஸ்னிய நூலக எரிப்பிற்கும் இடையில் வேறுபாடில்லை. சேர்பியர்களை போர்க் குற்றவாளிகள் என்று ஏற்றுக்கொண்ட உலகத்தின் முன்னால், சிங்கள தேசத்தையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும். எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். உலகின் வரலாற்றுப் பாடங்கள் எங்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமையட்டும். ஒன்றிணைந்த சக்தியாக நாம் நிமிர்ந்து நிற்போம்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )