
போதைக் கலாசாரத்தால் மீண்டும் ஒரு மரணம்..!!
(மாலினி மோகன்)
அண்மையில் முழு நாட்டையும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவமொன்று பதிவானது. அதுதான் சின்ன இளஞ்சிட்டு ஆயிஷாவின் மரணமாகும். பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தில் வசித்துவரும் ஆயிஷா கடந்த 27ம் திகதி காலை 10 மணியளவில் வீட்டிலிருந்து கோழி இறைச்சி வாங்குவதற்காக கடைக்குச் சென்றிருந்தாள். ஒரு மணி நேரம் கடந்தும் பிள்ளையைக் காணாததால் தாய் துடிதுடித்துப் போனாள். பின்னர் தனது உறவினர்களிடம் விடயத்தைக்கூறி தேடுதல் மேற்கொண்ட போதும் பலனளிக்கவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் இறுதியாக பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்தனர். அதன்பின்னர் கிராம மக்களும் பொலிஸாரும் இணைந்து தேடுதல் மேற்கொண்டபோது மறுநாள் அதாவது 28 ஆம் திகதி மாலை வீட்டிலிருந்து சுமார் 150 மீற்றர் தூரமளவில் காணப்பட்ட காட்டுப்பகுதியில் சதுப்பு நிலப் பகுதியில் ஆயிஷாவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சிறுமிக்கு என்ன நடந்தது என்பதை விரிவாகப் பார்ப்போம்.
அட்டுலுகம அல் – கஸ்ஸாலி மகா வித்தியாலயத்தில் 4 ஆம் தரத்தில் கல்வி கற்றுவந்த ஆயிஷா, குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையாவாள். இவளின் மரணத்துக்கு காரணமான சந்தேகநபர் இவர்களின் சொந்தக்காரர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபரை அட்டுலுகம முஸ்லிம் கொலனியில் வைத்து விசாரணைக் குழுவினரால் கடந்த 30ம் திகதி கைதுசெய்ய முடியுமாயிற்று. இவர் கூலி வேலை செய்து அந்தக் கிராமத்தில் வாழ்ந்து வந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர். மொஹமட் பாருக் என்ற 29 வயதுடையவரே சந்தேகநபராவார். இவர் 3 பிள்ளைகளின் தந்தையென பொலிஸார் தெரிவித்ததோடு, அவனது மனைவி மீண்டும் கருவுற்றிருந்ததாகவும் தெரிவித்தனர். சந்தேகநபர் போதைவஸ்து பாவனைக்கு அடிமையானவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆயிஷா கடைக்குச் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பும் காட்சி அருகிலுள்ள சி.சி.ரி.வி. கமராவில் பதிவாகியுள்ளமையும் அறியமுடிந்தது. இவ்வாறு திரும்பிக்கொண்டிருக்கையிலேயே சிறுமி கடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சிறுமியை காட்டுப்பகுதிக்குள் இழுத்துச்சென்ற பாருக், அவளை உடல் ரீதியாக துன்புறுத்தியுள்ளான். எதுவும் அறியாத சிறுமி, கூக்குரலிடத் தொடங்கினாள். அவள் சத்தமிட்டதும் பயந்துபோனவன் துணியொன்றினால் அவளது வாயைப் பொத்தி சதுப்பு நிலத்தில் தள்ளி அவளது முதுகின் பின்னால் தனது முழங்காலை வைத்து அழுத்தினான். அதன்காரணமாக மூச்சுத் திணறி அவ்விடத்திலேயே அவள் உயிர் பிரிந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டவுடன் அவ்விடத்தை 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சூழ்ந்துகொண்டதாகவும் அதனால் பல சாட்சியங்களை தாங்கள் இழந்துவிட்டதாகவும் விசாரணைக் குழுவினர் தெரிவித்தனர். எது எவ்வாறிருப்பினும் சந்தேகநபரால் சிறுமி துஷ்பிரயோகத்துக்குள்ளாகி இருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். ஆயிஷாவின் பிரேத பரிசோதனை நீதிமன்ற வைத்தியர்கள் மூவரின் ஒத்துழைப்புடன் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றது. இந்தப் பரிசோதனையின் அறிக்கை வெளிவர முன்னரே பொலிஸார் சந்தேகநபரை கைதுசெய்திருந்தமை விசேட அம்சமாகும்.
சம்பவம் இடம்பெற்ற தினத்தில் சந்தேகநபர் அணிந்திருந்த ஆடைகளையும் பொலிஸார் கைப்பற்றியிருந்தனர். 5 பொலிஸ் குழுக்கள் இணைந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டதில் சம்பவம் தொடர்பில் சிறுமியின் உறவினர் ஒருவர் உட்பட நால்வரிடம் மேற்கொண்ட நீண்ட விசாரணையின் பின்னர் அவர்களில் இருவரிடம் வெவ்வேறாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது சம்பவம் தொடர்பிலான முழு விபரமும் வெளிவரத் தொடங்கியுள்ளது.
பிரதான சந்தேகநபர் பொலிஸ் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து ஆயிஷாவைக் கண்டுபிடிக்க ஒத்துழைப்பு வழங்கியதுடன், அவனது நடவடிக்கைகளை கூர்ந்து அவதானித்த பொலிஸார், அவனை தனியாக அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் அனைத்து உண்மைகளும் வெளிவந்தன. சிறுமி கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்புகையில் கடத்தப்பட்ட நிலையில் காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்று உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டாள். அவனது பிடியிலிருந்து தப்பித்துக்கொள்ள முயன்ற சிறுமியை வாயைப் பொத்தி மேலும் சில தூரத்துக்கு இழுத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னரே சதுப்பு நிலத்தில் தள்ளி காலால் அழுத்தியுள்ளான் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பண்டாரகம பொலிஸ் தலைமையதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.சீ.ராஜபக்ச தெரிவிக்கையில், சடலத்தை பிரேத பரிசோதனை செய்த வைத்தியர்கள், ஆயிஷாவின் உடலை வெட்டி பரிசோதனை மேற்கொண்டதன் பின்னர், சதுப்பு நிலத்தில் அழுத்தப்பட்டதால் மூச்சுத்திணறி இறந்துள்ளதாகத் தெரிவித்தனர். நீரில் மூழ்கியிருந்தில் சிறுமியின் நுரையீரலுக்குள் சேறு போனமையால் சுவாசிக்க முடியாமல் இறந்துபோயிருக்கிறாள் என அறிக்கையில் வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளதாக பொலிஸ் பரிசோதகர் மேலும் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் என்ன காரணம் கூறப்பட்டாலும் இளஞ்சிட்டு இவ்வுலகை விட்டுச் சென்றுவிட்டது. சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டான். இவன் சார்பில் எந்தவொரு சட்டத்தரணியும் மன்றில் ஆஜராகவில்லை. எனினும் ஒருசில நாட்களில் பிணையில் வெளியே வரத்தான் போகின்றான். மீண்டும் போதைப்பொருளுக்கு அடிமையாகி இன்னொரு சிறுமியின் உயிரை காவுகொள்வதற்கு முன் கடுமையான சட்டங்கள் நாட்டில் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் ஒரே கோரிக்கையாக இருக்கின்றது. இது தொடர்பில் ஜனாதிபதியும் நீதியைப் பெற்றுத் தருவதாகக் கூறியிருக்கிறார். பல இடங்களில் ஆயிஷாவுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்று வருவதை காணக்கூடியதாக இருக்கிறது.
ஆயிஷாவின் இறுதிச்சடங்கு கடந்த 30 ஆம் திகதி பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் பின்னர் அன்றைய தினம் இரவே குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்ட சடலம் சிறிது நேரம் அங்கு வைக்கப்பட்டு அட்டுலுகம பெரிய பள்ளிவாசலில் சமயச் சடங்குகள் மேற்கொள்ளப்பட்டு அங்குள்ள பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

