ஊர் உலா!!

ஊர் உலா!!

(கார்த்திகை)

இரவிரவாகச் சிணுங்கிக் கொண்டிருந்த மழை அதிகாலையிற்தான் சற்று ஓய்ந்திருந்தது. ஊருக்கு வந்திருந்த சுப்பையர் வெள்ளையும் சள்ளையுமாக ‘வாக்கிங்’ புறப்பட்டார். ஊர் முற்றிலுமாக மாறியிருந்தது. வழியில் கண்டவர்கள் எல்லாம் தலையசைத்தும், “எப்ப வந்தனீங்கள்?” என்று சுகம் விசாரித்தும் கடந்து போனார்கள். அவர்களில் பாதிப்பேரை அடையாளமே தெரியவில்லை சுப்பையருக்கு.

சுப்பையர் ‘லண்டன் றிற்றேண்’. சுமார் பதினாறு வருடங்களுக்கு முன்னர், குண்டு வீச்சும் ஷெல்லடியுமாக நாடு அவதிப் பட்டுக் கொண்டிருந்த காலத்தில், சிறுவயதிலேயே நாட்டை விட்டுப் போன மகனுடன் போய் ஐக்கியமாகி விட்டார். சிறு வயதிலேயே மகனை ‘ஹொஸ்டல்’ இல் தங்கவைத்து யாழ் பிரபல கல்லூரியொன்றில் படிப்பித்தவர் சுப்பையர். ஊருக்குள் இருந்தால் குறுகிய வட்டத்துக்குள் இருக்கும் கிராமத்து சிந்தனைதான் அவனுக்கும் வந்துவிடும் என்ற கணிப்பு அவருக்கு. யாழ் பிரபல கல்லூரியொன்றில் மகன் படித்ததில் தனது அந்தஸ்து கூடிவிட்டதான ஒரு எண்ணம் சுப்பையருக்கு.

நாட்டில் பிரச்சனைகள் தீவிரமானதும், தாயில்லாமல் தனியனாக நின்று தன்னை வளர்த்து ஆளாக்கிய தகப்பனையும் சேர்த்துத் துடைத்தெறிந்து விட்டு வெளிநாட்டுக்கு ஓடிவிட்டான் மகன். இருக்கும் காணிகளை எல்லாம் வித்துச் சுட்டு, இங்கேயிருந்து சுப்பையர் அனுப்பினவனுக்குக் காசு கட்டிக் கொண்டிருந்தது… அது தனிக்கதை. ஒருவழியாக, தனக்குப் பிடிச்ச ஒருத்தியுடன் மகன் லண்டனில் ‘செற்றில்’ ஆகிவிட்டான் என்று அறிந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டார் சுப்பையர். அவன் என்ன நினைத்தானோ…. திடீரென்று சுப்பையருக்கும் ‘லண்டன் ஃபிளைற்’ எடுக்க யோகம் அடித்தது. பல வருடப் பிரிவு. மகனும் தனது தேவை வந்தாலன்றி அள்ளளவாகப் பழகுகிறவன் இல்லை. தகப்பனுக்கும் மகனுக்கும் பெரிதாக ஒட்டவில்லை. உதட்டளவில் பேசிக் கொண்டார்கள். மருமகள் அதற்கும் மேல். மரியாதை தவறுவதில்லை. ஆனால், ‘இது என்னுடைய குடும்பம், நீங்கள் என்ன இருந்தாலும் வெளியில் ஆள்’ என்பதில் தெளிவாக இருந்தாள். வயது போன காலத்தில் தனியாக மாண்டு போகாமல் மகன் குடும்பத்துடன் இருக்கவாவது கிடைத்ததே என்ற சந்தோசம் சுப்பையருக்கு.

கடைகண்ணிக்குப் போவது, பேரப்பிள்ளைகளைப் பார்ப்பது, பள்ளிக்கு விட்டு எடுப்பது, வீட்டைத் துப்பரவாக வைத்திருப்பது, சமையல் சாப்பாடு என்று எல்லாவற்றிலும் தானும் பங்கெடுத்து வாழ்க்கையை மும்முரமாக்கிக் கொண்டார் அவர். மகனும் மருமகளும் பாவம்… நாள் முழுக்க வேலை. இருக்கும் நேரத்தில் ரிவி, ஓய்வு, பார்ட்டிகள் என்று அவர்கள் பொழுது போய்விடும். தனக்கென்று தனியாக அரசாங்க உதவித் தொகையும் அரச வீட்டு வாடகைக் கொடுப்பனவும் வந்துவிடுவதால், சுப்பையருக்குப் பணப் பிரச்சனை இல்லை. என்ன செலவு வந்துவிடப் போகிறது அவருக்கு? தனக்கென்று கொஞ்சப் பணத்தை எடுத்து வைத்துக் கொண்டு மிகுதியை அப்படியே மருமகளிடம் கொடுத்து விடுவார் அவர்.

மிக நீண்ட பதினாறு வருடங்களின் பின் இப்போதுதான் மறுபடி ஊருக்கு வந்திருக்கிறார். அதுவும் பேரனுக்கு கொழும்பில் ஒரு குறுகிய காலப் பயிற்சி. அவனைத் தனியாக எப்படி அனுப்புவது என்று பாட்டனையும் உதவிக்கு அனுப்பியிருக்கிறார்கள். கொழும்பு வந்த சில நாட்களிலேயே பிரச்சனை இறுகிவிட்டது. பயிற்சிகள் இடைநிறுத்தப் பட்டு விட்டன. சாமான்களுக்கு பெருத்த தட்டுப்பாடு வந்துவிட்டது. ஊருக்குப் போய் கொஞ்சநாள் இருக்கலாம் என்றால் பேரனுக்கு துளியும் விருப்பமில்லை. சுப்பையரின் பிடிவாதம்தான் இரண்டுபேரையும் இப்போது ஊருக்குக் கொண்டு வந்திருக்கிறது.

ஊரில் ஒன்றுவிட்ட தங்கை மகள் சரசு இருக்கிறாள். பிள்ளைகள் இல்லை. அவளின் சகோதரங்கள் அவளைத் தாங்கு தாங்கென்று தாங்குகிறார்கள். பெரிய மாளிகை மாதிரி வீடு, சுற்று மதில், வளவு நிறைய வண்ண வண்ணப் பூக்களுடன் பூந்தோட்டம் என்று நன்றாக இருக்கிறாள். புருசனுக்கும் வேலை வெட்டி இல்லை. அவர்களுடன்தான் சுப்பையரும் பேரனும் தங்கல்.

பசுமையை ரசித்தவாறே கொஞ்சத் தூரம் நடந்து வந்துவிட்டார் சுப்பையர். லண்டனில் இருந்தபோது விடாமற் துரத்திய முட்டு வலி எங்கே போனது என்றே தெரியவில்லை. ஊர்வாசத்திற்கு அவ்வளவு சக்தி. திடீரென்று இருண்டு கொண்டு வந்தது. கருமேகம் ஒன்று கூடி ‘பொட்! பொட்!’ என்று சில மழைத்துளிகள் தலையில் விழுந்ததும் தான் எங்கே நிற்கிறோம் என்ற உணர்வே வந்தது அவருக்கு. சுற்றுமுற்றும் பார்த்து மழைக்கு ஒண்டிக்கொள்ள இடம் தேடினார். அருகிலிருந்த தேநீர்க் கடையில் இறக்கியிருந்த சாய்ப்பில் சிலர் ஓடி வந்து ஒதுங்கினர்கள். சுப்பையரும் விரைந்து போய் ஒண்டிக் கொண்டார். ஒரு பாட்டம் ‘சோ’வென்று அடித்து ஓய்ந்தது மழை. காற்றில் ஆடிய மரக்கிளைகளிலிருந்து அபிஷேகம் செய்த மழைத்தண்ணீரைப் பொருட்படுத்தாமல் சாய்ப்பிற்குள் நின்றவர்கள் வீதியில் இறங்கி நடக்கத் தொடங்கினர்.

“சாய்….!! என்ன அருமையாக் கிடக்கு. குளிருக்கை, உடுப்பைச் சுமையாப் போர்த்தி மூடிக் கட்டிக்கொண்டு திரியுறதும் ஒரு பிழைப்பே…..!!”
மழை விட்ட பிறகும் சார்மானத்தின் கீழேயே நின்று கொண்டிருந்தார் சுப்பையர்.
“என்னவும் ஓய்…..!! எப்ப வந்தனீர்…..?”
பழக்கப்பட்ட ஒரு குரல் அன்புடன் விழித்தது. இந்த ‘ஓய்’ அவரின் வயதிற்குரியவரின் காலத்தில், நண்பர்களை விழிக்கும் யாழ் மேல்மட்டப் பேச்சு வழக்கு.
அவரின் பால்ய நண்பன் சின்னத்தம்பி இரண்டு காளை மாடுகளுடன் வந்து கொண்டிருந்தான். மாடுகள், கழுத்திலிருந்த மணிகள் சிணுங்க கம்பீரமாக நடந்தன.
“என்னடாப்பா….! இங்கயே நின்றிட்டாய்? வீட்டை வா…! மனுசியும் பார்த்தா சந்தோசப்படுவா…”

இருவருமாக அளவளாவிக்கொண்டே வீடுவரைக்கும் வந்துவிட்டார்கள். கேற்றடிக்குப் பக்கத்திலிருந்த செவ்விளனி மரத்தடியில் ஏதோ செய்துகொண்டிருந்த பார்வதிக்கு இவர்களைக் கண்டதும் சந்தோசம் தாங்கவில்லை.
“வாருங்கோ அண்ணை…! எப்ப வந்தனீங்கள்? பயணம் சுகமோ? ஊரைத்தான் மறந்திட்டியள்….. பேரன் எங்கை?” மூச்சுவிடாமல் ஆயிரம் கேள்விகள்.
“கரண்ட் இல்லாமல் ரா முழுக்க உழண்டு கொண்டு கிடந்தவன், இப்பான் இழுத்துப் போத்திக்கொண்டு படுக்கிறான்… எக்கணம் எழும்ப மத்தியானம் ஆகும்…” இத்தனை வருட ஊர்ப்புதினங்களையும் அறிந்துகொள்ளும் அவாவுடன் சின்னத்தம்பியருடன் பேச்சைத் தொடர்ந்தார் அவர்.

கதையின் இடைநடுவில் குரக்கன் ரொட்டி சம்பலுடன் நல்ல தடிப்பான ஆட்டுப்பால் தேத்தண்ணியும் கொண்டு வந்தா பார்வதி.
“காசைக் கொட்டிக் குடுத்தாலும் சாமானுகள் கிடைக்குதில்லை. சரியான தட்டுப்பாடு. பால்மா இல்லாமல் சனம் தவிக்குது. நீங்கள் என்னெண்டு சமாளிக்கிறியள்?” வினாவினார் சுப்பையர்.

“என்னண்ணை பேய்க்கதை…. நாங்கள் எப்ப உந்தப் பால்மாவை வாங்கின்னாங்கள்…? கொட்டடியில ரெண்டு நல்ல திறம் பாலாடு நிக்குது. பால் தாராளமாக் காணும்…”
“அப்ப சாப்பாட்டுக்கு…..?”
“வளவைப் பாரடாப்பா….” சின்னத்தம்பியர் பெருமிதமாகச் சொன்னார்.
“வளவுக்கை என்னதான் இல்லை…? தென்னை, மா, பலா, மாதுளை, எலுமிச்சை, வாழை எண்டு எல்லாம் இந்தப்பக்கம் கிடக்கு. அந்தப் பக்கத்தில பப்பாசி, கமுகு, வெத்திலைக் கொடிக்காலுகள், கறிவேப்பிலை, அகத்தி எண்டு எல்லாம் இருக்கு. இடையிடை ஊடுபயிர் வைக்கிறம். ஒரு சின்ன இடத்தையும் வீண்டிக்கிறதில்லை….. தோட்டத்தில எல்லா மரக்கறியும் இருக்கு…. குரக்கன், உழுந்து எல்லாம் விதைக்கிறம்….அத்தினை சாப்பாட்டுப் பயிரும் விளையுது. வெங்காயம், மிளகாய் எண்டு அதுகளுக்கும் பஞ்சமில்லை….. வயல்லை நெல்லு…. என்னத்துக்கு கவலைப்படுவான்….?”

கதையின் இடையில் காணாமல் போயிருந்த பார்வதி ஒரு சிறு கடகமும் கையுமாக வந்தார்.
“கோழியளைத் திறந்துவிட அயத்துப் போனன். கையோட முட்டையளையும் பொறுக்கிக்கொண்டு வந்திட்டன்…..”
நல்ல ஊர்க்கோழி முட்டைகள். 10 ரூபா வித்த சாதாரண முட்டை ஒண்டு இப்ப 60 ரூபா விக்குது.
“எடப்பா….! உரம் இப்ப குதிரைக் கொம்பல்லோ…? நீ உரத்துக்கு என்ன செய்யிறனீ..?”
“ஆடு, மாட்டு எரு, குப்பை கூளம் எல்லாம் திறமான பசளை இல்லையோ….? உரம் இல்லாட்டா என்ன? எங்கடை சேதனப் பசளைக்கு இதெல்லாம் இணையாகுமோ..? இண்டைக்குப் பார்….. விளைச்சலைக் கூட்டி உடனடிப் பணக்காரராக வேணுமெண்டு கெமிக்கல் உரத்தை அள்ளிக் கொட்டிச்சுது சனம். அரசாங்கத்துக்கு இதுகளிலை உழைக்க வேணும்….. இப்ப பார்…. ஆர் தெருவில நிக்கிறதெண்டு? சனந்தான் மாயுது…. எந்த அரசியல்வாதியாவது பட்டினி கிடந்து செத்தான் எண்டு வரலாறு இருக்கோ….?

“சிறுபிள்ளை வேளாண்மை வீடுவந்து சேராது எண்டதே எங்கடை பிள்ளையளட்டை பொய்த்துப் போகேல்லையோ….? என்ன அழகா சுயமா எங்கடை பொருளாதாரத்திலை வாழ வழிகாட்டினாங்கள்…. பிரச்சனை காலத்தில எங்களுக்குப் போடாத பொருளாதாரத் தடையே…? நீங்கள் இங்கை இல்லை அண்ணை…… நாங்கள் என்ன பட்டினியே கிடந்தனாங்கள்? இல்லை… ஆரும் வெளிநாட்டுக் காசு அனுப்பினவையோ…..?” இடைமறித்த பார்வதி ஒரு பேருண்மையை அழகாகச் சொன்னா.

“அப்ப எரிபொருள்…….? மணித்தியாலக்கணக்கா பவர் கட் வருதே…..?” சுப்பையர் மனதில் இன்னும் ஆயிரமாயிரம் கேள்விகள். அவர் ஊரைவிட்டுப் போக முன்னர் இவ்வளவு மோசமாக பிரச்சனை வந்ததில்லை. இத்தனை வருட வெளிநாட்டு வாழ்க்கை, இலகுவாக – உடலை வருத்தாமல் வாழக்கூடியதாக இருப்பது எல்லாம் உடலுக்குப் பழக்கப்பட்டு விட்டதன் பின், பிரச்சனைகளுக்கிடையில் வாழ்க்கையை ஓட்டுவது என்பதே மலைப்பாக இருந்தது சுப்பையருக்கு.

“இப்ப பாக்கிறாய்தானே… சனம் பக்கத்தில எங்கயாவது போறது எண்டாக்கூட உடனை மோட்டார் சைக்கிளோ இல்லாட்டா ஓட்டோ பிடித்தோ வெளிக்கிட்டு நல்லாப் பழகீற்றினம்…… முந்தி…. நினைச்சுப் பார்…. பாதிக்கு மேல பஸ் பிடிச்சுத்தான் பிரயாணம்… மிச்ச ஆக்கள் சைக்கிள் இருந்தால் சைக்கிள்ள… கிட்டத்தில எண்டால் ரெண்டு எட்டு வைச்சு நடக்க ஆரும் பஞ்சிப் பட்டவையே…..?”

“ஓமண்ணை…! தோட்டங்களிலயும் இறைப்புக்கு, உழுகிறதுக்கு எண்டு மோட்டரும் போட்டு ட்ரைக்டரும் பிடிச்சு பழகீட்டுது…. இப்ப இந்த மனுசன் திரும்பவும் துலா மிதிக்க ஒழுங்கு செய்திருக்கிறார்…. இவர் எப்பவும் உழவுக்கு காளையளை வைச்சிருக்கிறபடியால் அந்தப் பிரச்சனை இல்லை…” இடையிடை பார்வதியும் குறுக்கிட்டார்.

“ஏன்? ‘காஸ்’ இல சமைச்சுப்பழகி இப்ப திருப்பியும் விறகடுப்போ எண்டு நீ புலம்புறதையும் சொல்லன்….” ஒரு முதிர்ந்த நக்கல் விட்டார் சின்னத்தம்பியர்.

“பவர் கட், சாமானுகளுக்குத் தட்டுப்பாடு எண்டு.. எல்லாம் பிரச்சனைதான்…. இல்லையெண்டு சொல்லேல்லை… ஆனாப் பார்,……. துளி மண்ணெண்ணெய் விட்ட ஜாம் போத்தல் விளக்கில நாங்கள் எத்தினை வருசம் வாழ்ந்தனாங்கள்…? அப்பிடிப் படிச்சவைதான் இப்ப பெரிய பெரிய உத்தியோகத்தில இருக்கிறவை எல்லாம்… ஏன் வெளிநாட்டில இருந்தாலும் அந்தத் தலைமுறைக்கு இது மறக்குமோ?… எல்லாம் வெல்லலாம்….!!”

“தெற்கில இருக்கிறவை மாதிரி அரசாங்கத்தை மட்டுமே நம்பிக்கொண்டு இருக்கிற சனமில்லை எங்கடை இனம்…. தேவை ஏற்படேக்க புதுப்புதுக் கண்டுபிடிப்புகளோடை சீவிச்ச இனமல்லோ நாங்கள்…. இப்ப தெற்கில இருக்கிறவையே எங்கட புண்ணியவானட்டை நாட்டை விட்டிருந்தால் இந்தப் பிரச்சனையே வந்திராது எண்டு சொல்லேல்லையோ…..?” சின்னத்தம்பியரின் குரலில் பெருமிதமும், அதேசமயம் எவற்றையெல்லாம் தொலைத்து விட்டோம் என்ற ஏக்கமும் தொனித்தது.

பேரனையும் கூட்டிக்கொண்டு மீண்டும் வருவதான உறுதிமொழியுடன், நீண்ட நாள் நண்பன் குடும்பத்திடமிருந்து விடைபெற்றார் சுப்பையர். மனது இலகுவாகியிருந்தது. சரசு வீட்டில் முற்றிலும் எதிர்மறையாக இருந்தது.
“வாங்கோ மாமா…..!! கன தூரம் நடந்திட்டியள் போல…” இடையிடை ‘உஸ்… உஸ்….’ என்று பெருமூச்சு விட்டாள் சரசு.

“இந்த கண்டறியாத ‘கரண்ட் கட்’ டாலை ஒரு ஃபான் கூடப் போடேலாது. தேத்தண்ணி போடுவம் எண்டால்…. கேத்திலும் போடேலாது…”
“நான் குடிச்சிட்டன்…. ஏன் பிள்ளை..!! விறகுகிறகு ஒண்டும் இல்லையே…?”
“உந்தப் புகையுக்க நிண்டால் எனக்கு ஒத்துவராது மாமா..! காசைக் குடுத்தால் இங்க கஸ்டப்பட்டு எண்டாலும் சாமானுகள் வாங்கலாம்… நானெல்லாம் இப்ப ஏலாதெண்டால் உடனை சாப்பாடு ஓடர் பண்ணிப்போடுவன்….” சொல்லியபடி சோபாவில் சரிந்தாள் சரசு.
“சை….!! ஒரு ரிவி கூடப் பாக்கேலாமக் கிடக்கு….”

அப்போதுதான், உடலுழைப்பு எதுவுமே போடாமல், காசை விட்டெறிந்து சோம்பேறியாக ஒரு மேல்மட்ட வாழ்க்கை வாழும் ஒரு வர்க்கமும் இங்கு இருப்பது சுரீரென்று உறைத்தது சுப்பையருக்கு. வெளிநாட்டில் இருப்பவர்கள் காசுக்காக இரவுபகலாக, குளிர் மழை என்று பாராமல் என்னென்ன வேலையெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது என்றதைக் கண்கூடாகப் பார்த்தவர் அவர். வீட்டைச் சுற்றியுள்ள நிலம் முழுவதிலும் பூங்கன்றுகளும் பதிக்கப்பட்ட புற்தரையுமாக எந்தப் பிரயோசனமும் இல்லாத அழகு மட்டுமே இருப்பது இப்போதுதான் கண்ணை உறுத்த, மனதுக்குக் கஷ்டமாக இருந்தது.

நாட்டில் எங்கள் மக்கள் கஷ்டப்படுகினம் என்று பார்த்தும் பாராமல் காசை அனுப்பி அனுப்பி இப்படி ஒரு சமூகம் உருவாக நாங்கள்தான் வழிசெய்து விட்டோமோ என்று பட்டது. ‘பலர் நாளாந்த வாழ்க்கை நடத்தவும் கரைச்சல் படுகின்றனர்…. சிலருக்கு மட்டுமே தொடர்ந்த பண உதவி கிடைக்குது…. அவர்களும் அதை வைத்து வாழ்வை மேம்படுத்தாமல் உட்கார்ந்து சாப்பிட்டு பழக்கப்பட்டு விட்டார்களோ….? அப்படியென்றால் பணம் அனுப்புபவர்கள்தான் இந்தச் சிக்கலைத் தீர்க்கவும் வேண்டும்…..’

என்ன பிரச்சனை இருந்தாலும், கடைசி காலத்தை நாட்டில் கழிக்க வேண்டும் என்று அடிமனதில் இருந்த நினைப்பு ஒரு தீர்மானமாக மாறுவது சுப்பையருக்கு சந்தோசத்தையே கொடுத்தது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )