சிந்திக்க…..

சிந்திக்க…..

ஒரு அநியாயக்கார அரசன் ஒருவன் ஒரு அப்பாவிக் குடிமகனைக் கைது செய்து மூன்று மீட்டர் மாத்திரமே பரப்பளவான ஒரு தனிச் சிறையில் அடைக்கும்படி கட்டளையிட்டான்.

நிரபராதியான அந்த குடிமகன் ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்தான்.
“நான் நிரபராதி, ஏன் என்னைக் கைது செய்தீர்கள்? ஏன் என்னைச் சிறையில் அடைத்தீர்கள்?”
என்று உரக்கக் கதறினான்.

இதனால் அவனை ஒரு மீட்டர் மாத்திரமே விசாலமான ஒரு தனிச் சிறையில் அடைக்கும்படி கட்டளை வந்தது.

மீண்டும் ஆர்ப்பாட்டம் செய்தான் குடிமகன். ஆனால் இம்முறை “நான் நிரபராதி” என்ற வாதத்தை மறந்துவிட்டான்.
“இது என்ன கொடுமை! இந்தச் சிறையில் எப்படி இருப்பது? உறங்குவது? அமர்ந்து கொண்டுதானே உறங்க முடியும்? இது உங்களுக்கே தப்பாகத் தெரியவில்லையா?”
எனக் கதறினான்.

சினம் கொண்ட காவலன் இன்னும் நான்கு சிறைக் கைதிகளை அவனோடு சேர்த்து அந்தச் சிறிய கூட்டில் அடைத்துவிட்டான்.

இப்போது ஐந்து பேரும் இணைந்து கூக்குரலிட்டனர்.
“எங்களால் முடியாது. நாங்கள் மூச்சுத்திணறி செத்து விடுவோம். உங்களுக்கு ஈவிரக்கம் எதுவும் இல்லையா?”
எனப் புலம்பினார்கள்.

மேலும் சினம் கொண்ட காவலன் ஒரு பன்றியை அவர்களோடு சிறையில் அடைத்து விட்டான்.

விரக்தியடைந்த அவர்கள்,
“நாங்கள் இந்த அசிங்கத்தோடு இந்தச் சிறிய கூட்டில் எப்படி இருப்பது? தயவுசெய்து இந்த பன்றியை மாத்திரமாவது வெளியே எடுத்துவிடுங்கள்” எனக் கெஞ்சிக்கேட்டனர்.

தயவு காட்டிய காவலர் ‘பன்றியை’ வெளியே எடுத்தான்.

அடுத்த நாள் அரசன் அந்தப் பக்கமாக வந்து,
“இப்போது உங்கள் நிலை எப்படி?” என்று விசாரித்தான்.

“நாங்கள் நல்ல சுகமாக இருக்கிறோம். எங்கள் பெரிய பிரச்சினை தீர்ந்துவிட்டது” என்று பதில் கூறினார்கள்.

இப்படித்தான் எமது நாட்டில் ‘பன்றிமயக் கோட்பாடு’ அமுல்படுத்தப் படுகிறது. இறுதியில் பன்றியை மாத்திரம் எடுத்து விட்டால் போதும் என்ற கோரிக்கையோடு ஆர்ப்பாட்டம் முடிந்துவிடுகிறது. அதற்கு முன்னால் இருந்த விவகாரம், அதற்கும் முன்னால் இருந்த மூல விவகாரம் எல்லாம் மறக்கடிக்கப்படுகிறது.

புதுப்புதுப் பிரச்சினைகளைக் கட்டவிழ்த்து விடுவார்கள், முடிவில், ‘பன்றிமயக் கோட்பாட்டை’ நடைமுறையாக்குகின்றனர். அதிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காக முதன்மைப் பிரச்சினைகளை நாமே மறந்து விடுகின்றோம்.
மறக்க வைக்கப்படுகிறோம்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )