
ஒலிம்பிக் சுடரை ஏந்திய இலங்கை தமிழர்; வரலாறு படைத்தார் தர்ஷன் செல்வராஜா
2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் 9 நாட்களே உள்ளன.
உலகம் முழுவதும் வலம் வந்த ஒலிம்பிக் சுடர், போட்டியை நடத்தும் பிரான்ஸைச் சுற்றி ஏற்கனவே எடுத்துச் செல்லப்படுகின்றது.
இந்நிலையில், பிரான்ஸ் முழுவதும் பயணிக்கும் ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்லும் பாக்கியம் இலங்கை தமிழர் ஒருவருக்கு கிடைத்தது.
தற்போது பிரான்சில் வசிக்கும் இலங்கையர் தர்ஷன் செல்வராஜாவுக்கு அந்த அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
தர்ஷன் செல்வராஜா பிரான்சில் பிரபலமானவர் ஆவார்.
பிரெஞ்சு கலாசார பாரம்பரியமாக கருதப்படும் பாண் உற்பத்தி செய்யும் பிரான்சில் சிறந்த பேக்கராக தர்ஷன் கருதப்படுகிறார்.
இதன் காரணமாக பிரான்ஸ் ஜனாதிபதிக்கு பாண் உற்பத்திப் பொருட்கள் வழங்கும் ஒப்பந்தமும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
நேற்று முன் தினம் ஒலிம்பிக் சுடரை ஏற்றிச் செல்லும் அதிர்ஷ்டத்தைப் பெற்ற தர்ஷன் செல்வராஜா, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் சுடரை ஏற்றிய முதல் இலங்கையர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார்.
நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் தர்ஷன் செல்வராஜாவிடம் ஒலிம்பிக் தீபம் வழங்கப்பட்டிருந்த நிலையில் அவர் அதனை ஏந்தி சுமார் 2.5 கிலோமீற்றர் வலம் வந்துள்ளார்.