
யுத்தக் குற்றச்சாட்டுகள் மிகைப்படுத்தப்பட்டவை 40,000 பொதுமக்களதும் மனித எச்சங்கள் எங்கே?
விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது யுத்தகுற்றங்கள் இழைக்கப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் மிகைப்படுத்தப்பட்டவை என முன்னாள் இராணுவதளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகா நிராகரித்துள்ளார்.
40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்றால் அவர்களின் மனித எச்சங்கள், எலும்புக்கூடுகள் எங்கே எனவும் சரத்பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார்.
எனினும் யுத்தத்தின் பின்னர் சில சம்பவங்கள் இடம்பெற்றதை நிராகரிக்காத அவர், ஒருசம்பவம் குறித்து நான் விசாரணையை ஆரம்பித்தேன் எனினும் பதவியிலிருந்து நீக்கப்பட்டேன் விசாரணையை தொடர முடியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் இறுதி யுத்தத்தின்போது உயிர்தப்பினார்கள் அவர்களை நான் பாதுகாப்பாக வெளியேற்றினேன். முதலில் 2009 மே 19ம் திகதி வெள்ளமுள்ளிவாய்க்காலில் இருந்து 1,50,000 பேரை மீட்டேன், யுத்தம் முடிவடைவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் 85,000 பேரை மீட்டேன் எனத் தெரிவித்துள்ள சரத்பொன்சேகா, நாங்கள் பொதுமக்களின் உயிரிழப்புகள் அதிகரிப்பதை தவிர்த்தோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் கனரக ஆயுதங்கள் ஆட்டிலறிகள் போன்றவற்றை மிகவும் கட்டுப்பாட்டுடன் பயன்படுத்தினோம். குறிப்பாக 2009ம் ஆண்டின் ஐந்து மாதங்களில் அவ்வாறே போரிட்டோம் எனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
2009 இல் 2000 படையினரை இழந்தேன் என குறிப்பிட்டுள்ள அவர், 2008 ம் ஆண்டு முழுவதும் நான் 2000 படையினரை இழந்தேன் ஆனால் 2009 இன் நான்கரை மாதங்களில் கட்டுப்பாட்டுடன் தாக்குதலை மேற்கொண்டதால் நான் 2000 படையினரை இழந்தேன் எனத் தெரிவித்துள்ளார்.
அவர்கள் அந்த சிறிய பகுதிக்குள் முற்றுகையிடபட்டிருந்தார்கள் எங்களால் ஒரு மாதத்திற்குள் அவர்களை முடித்திருக்கலாம் பொதுமக்கள் உட்பட அனைவரின் மீதும் கண்மூடித்தனமாக தாக்குதலை மேற்கொண்டிருந்தால் ஒருமாதத்திற்குள் அவர்களை முடித்திருக்கலாம். ஆனால் நாங்கள் அதனை செய்யவில்லை. நாங்கள் கட்டுப்பாட்டுடன் தாக்குதலை மேற்கொண்டோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிச்சயமாக இந்த உயிரிழப்புகள் குறித்த புள்ளிவிபரங்கள், யுத்த குற்றச்சாட்டுகள் மிகைப்படுத்தப்பட்டவை எனத் தெரிவித்துள்ள அவர், இந்தத் தகவல்கள் உண்மையென்றால் நீங்கள் அந்தப் பகுதியில் எங்கு சென்றாலும் மனிதப் புதைகுழிகளை பார்க்க முடிந்திருக்க வேண்டும் ஆனால் அவ்வாறான ஒரு சூழ்நிலை இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்தில் உள்ள சிலர் குற்றங்களில் ஈடுபட்டனர் என்பதை நீங்கள் நம்பவில்லையா?
பதில் சில சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம் என்னால் நிராகரிக்க முடியாது, நான் இது குறித்து பாராமன்றத்திலும் பேசியுள்ளேன், இரண்டு முறை பேசியுள்ளேன்.சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.ஆனால் அவை மோதலின் போது இடம்பெறவில்லை யுத்தத்தின் பின்னரே இடம்பெற்றன என்றார்.