
இலங்கை சீன உறவு புதிய பரிணாமம்
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நெருக்கடிகள் அதிகரித்திருக்கின்றன. சீனாவின் கால்கள் இலங்கையில் பதிந்திருந்தாலும், கடந்த பத்தாண்டுகளில்தான் இலங்கை சீன உறவு புதிய பரிணாமம் எடுத்திருக்கிறது. ஆரம்பத்தில் இலங்கைமீது பொருளாதார ஆதிக்கத்தை மட்டுமே செலுத்தி வந்த சீனா, இப்போது அரசியலிலும் கலாசாரத்திலும் அதிக கவனம் செலுத்துகின்றது. சிங்கள தேசமும் தமிழர் தாயகமும் சீன மயமாக்கப் பட்டிருப்பது இலங்கைக்கு அச்சுறுத்தலாக அமையுமோ இல்லையோ, இது நிச்சயமாக தமிழர்கள் வாழ்வில் ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் காட்டப் போகிறது.
சீனாவுக்கு இலங்கையின் நிலப்பரப்பில் செய்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. அதன் நோக்கமெல்லாம் இந்து சமுத்திரத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே. இந்து சமுத்திரம் ‘சீன சமுத்திரம்’ ஆக மாறுமுன் நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்ற நெருக்கடி நிலை இந்தியாவுக்கு. சீன அச்சுறுத்தலை இலங்கையில் குறைக்க வேண்டுமென்றால் இந்தியா மீண்டும் இலங்கையில் ஆதிக்கம் செலுத்த வேண்டும்.
‘இலங்கையின் உண்மையான நட்பு நாடு சீனாதான்’ என்றும், ‘இனிவரும் காலங்களில் ஆசியாவின் எழுச்சியை சீனாவே வழிநடத்தும் என்பது தெளிவாகியுள்ளது’ என்றும் ராஜபக்சே பகிரங்கமாகக் கூறியிருப்பதும் இந்தியாவுக்குப் பேரிடிதான். ஆழ்ந்து நோக்கினால், தெற்கே தமிழர்களைப் பகைத்திருப்பது, நேபாளம், வங்கம், பாக்கிஸ்தான் என்று அயல் நாடுகள் இந்திய வெளியுறவுக் கொள்கையை எதிர்த்து சீன ஆதரவாக மாறுவது
( அல்லது சீனாவிடம் கடனாளியாகி கைகட்டி நிற்பது ) போன்றன இந்தியாவுக்கு பெரும் பின்னடைவுகளே. பதிலுக்கு, கொழும்புக் கடலில் உருவாக்கப்பட்ட ‘சீனத் தீவு’, எந்தச் சிங்கள விதிமுறைகளுக்கும் உட்படாமல் சுயமாக இயங்குவது, இலங்கை அரசியலிலும் கலாசாரத்திலும் சீன ஊடுருவல் என்று சீனா ஆழ வேரூன்றுவது போன்றன இந்தியாவின் பதட்டத்திற்கான உறுதியான காரணங்கள்.
இந்தியா எப்படி ஈழத் தமிழர்களைப் பகடைக் காய்களாக்கி பந்தாடியது என்பது நாம் அறியாததல்ல. பல்வேறு ஆயுதக் குழுக்களை உருவாக்கி, பயிற்சியளித்து இலங்கைக்கு குடைச்சல் கொடுத்த இந்தியாவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர்கள் விடுதலைப் புலிகள். புலிகளின் காலத்தில் எந்தவொரு நாட்டினாலும் இலங்கையில் கூட நிலைத்திருக்க முடியவில்லை. தமிழர்களின் காப்பரணாக மட்டுமல்லாது சிங்கள நாட்டிலும் ஊடுருவல் இல்லாமல் காத்தவர்கள் புலிகள்.
1987 இல் நடந்த இந்திய- இலங்கை ஒப்பந்தம் மூலம், இலங்கை யாப்பில் செய்யப்பட்ட 13ம் திருத்தச் சட்டத்தை தமிழர்கள் மீது திணித்து தமிழர்களை அடக்கி வைக்கலாம் என்று கனவு கண்டன இரு அரசுகளும். ‘மாகாண சபை முறை’ நம்மை நாமே ஆள வழி செய்யும் என்று நம்பியவர்களும் உண்டு. காணி, காவற்துறை என்று எந்த அதிகாரங்களுமற்ற, 34 வருடங்களுக்குப் பின்னும் இன்னமும் சட்டமாக மட்டுமே இருக்கும் திருத்தச் சட்டம் எமக்கு எதுவுமே செய்யப் போவதில்லை என்பதை மக்கள் எப்போதோ புரிந்து கொண்டு விட்டார்கள். இப்போது, இதனை மீண்டும் தூசு தட்டித் தூக்கி, தென்னிந்திய தமிழர்களையும் எம்மவர்களையும் ஒருசேரத் திருப்திப் படுத்தப் பார்க்கிறது இந்தியா.
விளைவு…., சில ஈழத் தமிழர்களை குழுக்களாகத் திரட்டி, அவர்களுக்கு நம்பிக்கையூட்டி, வீணாய்ப் போன இந்தத் தீர்வை ஏற்றுக்கொள்ள வைக்கும் முயற்சியை முடுக்கி விட்டுள்ளது இந்தியா. இந்தியாவுக்கு ஒரு காரணமுண்டு. இந்திய – இலங்கை ஒப்பந்தம் உயிர்ப்புடன் இருக்கும் வரையில் இந்தியாவின் பாதுகாப்பிற்கு எதிரான எந்த ஒப்பந்தத்தையும் இலங்கையினால் செய்ய முடியாது.
இந்த 13ம் சட்டத் திருத்தத்தினால் எந்தவொரு பயனும் விளையப் போவதில்லை என்ற தலைவர் பிரபாகரனின் தீர்க்கதரிசனம் எவ்வளவு தூரம் உண்மை என்பது, 34 ஆண்டுகள் கடந்தும் இன்னமும் காகிதத்தில் வரையப்பட்ட சட்டமாக மட்டுமே 13ம் திருத்தச் சட்டம் இருப்பதிலிருந்தே புரிந்து கொள்ள முடியும்.
ஆயிரமாயிரம் மாவீரர்களையும் இன உணர்வாளர்களையும் ஆகுதியாக்கிய மண்ணில் மீண்டும் அடிமைத் தழையை இறுக்கிப் பூட்டுவதற்கான செயற்பாடுகளின் பின்னணியை மக்கள் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும். போலிகளைத் தூக்கியெறியவேண்டும்..