சிந்தனைக்கு சிறகு முளைக்கும்

சிந்தனைக்கு சிறகு முளைக்கும்

எண்ணங்களின் திறவுகோல்
எழுத்துக்கள்தான் ஊன்றுகோல்
சிந்தனைக்கு
சிகரம் வைக்கும்!
சித்தத்தில் தெளிவு தரும்!
பண்பைப் புகட்டிவிடும்!
இருந்த இடத்திலேயே
இருந்துகொண்டே
உலகை சுற்றிவரும்
அறிவு வரும்!

கற்பனா உலகிற்கெம்மை
கதியிலே கொண்டு செல்லும்!
உயிருக்கு மிக நெருங்கிய
உறவொன்று
உண்மையிலேயே
இவ்வுலகில் உள்ளதென்றால்,
‘புத்தகம்’தான் அதுவென்று
புத்தியில் ஏற்றிவைப்போம்!

மொழியோடெம்மை
இரண்டறக் கலப்பான்!
தீஞ்சுவை தருவான்!
கவலைகள் களைவான்!
உலகை
ஆனந்தமாக்குவான்!
உற்ற நண்பன்
புத்தகமே!
வாசித்துப் பார்!
சிந்தனைக்கு சிறகுகள்
முளைக்கும்!
நுண்மதி பெருக்கி
பெருநிறைவு தரும்!
வாசிப்பு வாழ்வின்
அங்கமாய் மாறும்.

எண்ணங்கள் சிதையாமல்
எடுத்தியம்பலாம்!
பண்டைய வரலாறு – அனைத்தும்
பகிரலாம்!
வாசிப்பு
வாழ்வின் தரத்தை
உயர்த்தும்!
நூல்கள் நூற்றாண்டு
பலநூறு நூற்றாண்டு
வாழும்!! ஆளும்!!

சாதிக்கும் வெறியை
சிந்தையில் ஏற்றும்!
அடிமனக் கசடுகள்
காணாமல் போக்கும்!
வஞ்சம் வன்மம்
வாழ்வில் நுழையாமல்
நன்நூல்கள்
தடுக்கும்.
வாசிப்பு வாழ்க்கையை
வசந்தமாக்கும்!!
புத்தகம் புத்தியை
விளை நிலமாக்கும்!!

வாசிப்புக்கு
வயதெல்லை ஏது?
வாசித்துப்பார்!
நீயும்
இளமையாய் மாறுவாய்!
வாசிப்பு
நேசிப்பை வளர்க்கும்.

கேட்டுப்பார்!
சாதித்தோர், அறிஞர்
அறநெறி தவறாது
அகிலத்தில் இருப்போர் – அனைவரும்
வாசிப்பு தமது ஆசான் என்பர்
ஆதலால் தம் வாழ்வு சிறந்தது என்பர்

வாருங்கள் எல்லோரும்!
வாசிப்போம்!
வாசிப்பை நேசிப்போம்!

மொழியோடு உறவாடும்
ஊடகம்
வாசிப்பு!
வாருங்கள் எல்லோரும்!
வாசிப்போம்!
மொழியை
நேசிப்போம்!

    -கார்த்திகை
CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )