
தோல்விப் பயத்தில் மொட்டுத் தரப்பு; ஜனாதிபதித் தேர்தலுக்கு அச்சம்- கம்மன்பில
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் மொட்டுக் கட்சியின் அனைவரும் தோல்வியடைய நேரிடும் என்பதனாலேயே முதலில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு அந்தக் கட்சியினர் முயற்சிக்கின்றனர் என்று பிவித்துறு ஹெல உறுமய கட்சித் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பிவித்துறு ஹெல உறுமய கட்சி தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின் போது, மே 15ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைக்கும் திட்டமொன்று இருப்பதாக வெளியாகும் செய்திகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே உதய கம்மன்பில இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது கம்மன்பில மேலும் கூறுகையில்,
மே 15ஆம் திகதிக்கு முன்னர் எப்படியாவது பாராளுமன்றத்தை கலைக்குமாறு மொட்டுக் கட்சியின் தலைவர்கள் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டால் தற்போதைய அரசாங்கம் படுதோல்வியடையும். அதன் பின்னர் நடத்தப்படும் பாராளுமன்றத் தேர்தலில் மொட்டுக் கட்சியின் எம்.பிக்கள் அனைவரும் முழுமையாக வீட்டுக்கு போக நேரிடும். இதனாலேயே ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டிய தேவையுள்ளது என்றார்.

