
ஜே.வி.பி. மீண்டும் ஆயுதம் தூக்குமா?
ஜே.வி.பி மீண்டும் ஆயுத நடவடிக்கைக்கு தயாராகி வருகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் அஜித் பி பெரேரா (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்) தெரிவித்துள்ளார்.
ஜனதா விமுக்தி பெரமுனா அரசாங்கத்தின் கீழ் சட்டத்தை நிர்வகிக்கும் அதிகாரம் உள்ளுர் மட்டத்திற்கே வழங்கப்படும் என அக்கட்சியின் கே.டி.லால்காந்த தெரிவித்திருப்பது ஜனநாயகத்திற்கு பாரிய அச்சுறுத்தல் என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கூறுகையில்,
88, 89ல் பல்லாயிரக்கணக்கான மக்களின் மரணத்திற்கு வழிவகுத்த அரசியல் மீண்டும் தலைதூக்குகிறது. ஜே.வி.பி.க்கு குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் இருந்தபோது, ஜே.வி.பி.யின் கிராமக் குழுக்களின் மூலம் நீதி வழங்கப்பட்டதை நாம் நினைவில் கொள்கிறோம். அதன் மூலம் பலர் கொல்லப்பட்டனர்.
அவர்கள் வழக்குகளை விசாரித்து மக்களுக்கு தண்டனை வழங்கினர். சிலர் கொல்லப்பட்டனர். மொரட்டுவ சரசரவியவின் துணைவேந்தர் மைக்கேல் ரொட்ரிகோ, கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஸ்டான்லி விஜேசுந்தர ஆகியோரைக் கொல்ல ஜனதா விமுக்தி பெரமுன தீர்மானித்தது. அப்படித்தான் நீதி வழங்கினர்.
ஜனதா விமுக்தி பெரமுனாவின் பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் சித்தாந்தத்திற்கு எதிரான மக்களை அவர்கள் கொன்றனர். அந்த பயங்கரவாத இயக்கத்தின் தலைவராக இருந்த லால்காந்த, ஜனதா விமுக்தி பெரமுனவின் மே தினத்திற்கு வந்திருந்த மக்களைப் பார்த்து, சட்டத்தை அமுல்படுத்தவும், நீதித்துறை அதிகாரங்களும் வழங்கப்படும் என்று கூறினார் எனவும் தெரிவித்தார்.

