
அடுத்த தேர்தல் மூலம் மொட்டு அகற்றப்படும்; ராஜபக்சக்களுக்கு எதிர்காலம் இல்லை – சம்பிக்க
நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்ற மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச , பசில் ராஜபக்ச ஆகியோருக்கு எதிர்காலம் இல்லை எனவும் என்ன செய்தாலும், என்னதான் மக்கள் திரண்டாலும் அடுத்த தேர்தலின் முடிவு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை இலங்கை அரசியலில் இருந்து அகற்றுவதாகவே இருக்குமெனவும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர், தற்போது இரண்டு ஆண்டுகளில் வட்டி செலுத்தாமல் திருப்பிச் செலுத்தப்படாத கடனின் அளவு சுமார் 1700 மில்லியன் டொலர்கள் எனவும் குறிப்பிட்டார்.
வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதாலும், வெளிநாட்டுக் கடனை திருப்பிச் செலுத்தாமையாலும் நாட்டுக்கான அபிவிருத்தி உதவிகள் முற்றாக நிறுத்தப்படும். நாட்டின் பொருளாதாரம் இன்னும் வீழ்ச்சியடைந்து வருவதாகவும், கடன் மறுசீரமைப்பு செய்யப்படாவிட்டால், அடுத்த ஆண்டு மீண்டும் அதே நிலைமையை நாடு சந்திக்க நேரிடும் என்றும் மீண்டும் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற வேண்டியிருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு வங்கி போன்ற நிறுவனங்கள் அளிக்கும் சலுகைகள் பட்ஜெட் இடைவெளியை ஈடுகட்ட வழங்கப்படாவிட்டால், அவற்றின் தாக்கம் நேரடியாக அபிவிருத்தி திட்டங்களை பாதிக்குமெனவும் கடனை மறுசீரமைக்காவிட்டால், இந்த ஆண்டு பெறப்பட வேண்டிய சுமார் 800 மில்லியன் டொலர் வெளிநாட்டு நிதி இழக்கப்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
தற்போது, இரண்டு ஆண்டுகளில் வட்டி செலுத்தாமல் திருப்பிச் செலுத்தப்படாத கடனின் அளவு சுமார் 1700 மில்லியன் டொலர்கள், மேலும் அதில் இருபது சதவீதத்தை குறைத்து மீதமுள்ள பதின்மூன்று பில்லியனுக்கு புதிய பத்திரங்களை வெளியிட சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்திற்கு முன்மொழிந்துள்ளது.
இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கிராம மட்டத்தில் 235 பிராந்திய சபைகளையும் பாராளுமன்றத்தில 149 ஆசனங்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கட்சியாகும். எனவே, மீண்டும் வீதிக்கு வந்து உழைத்து மக்களின் விருப்பத்தைப் பெறுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
ஆனால் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். வற்புறுத்தலையும் வன்முறையையும் பிரயோகித்த பொதுஜன பெரமுனவுக்கு எதிர்காலம் இல்லை. அத்துடன் நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்ற மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக், பசில் ராஜபக்ச ஆகியோருக்கு எதிர்காலம் இல்லை எனவும் என்ன செய்தாலும், என்னதான் மக்கள் திரண்டாலும் அடுத்த தேர்தலின் முடிவு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை இலங்கை அரசியலில் இருந்து அகற்றுவதுதாகவே இருக்குமெனவும் தெரிவித்தார்.
எனவே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உள்ள ராஜபக்ச அல்லாதவர்களுக்கு இந்த மக்கள் அடித்தளத்துடன் புதிய அரசியலிலும் புதிய அரசியல் கூட்டணியிலும் நுழைவதற்கான வாய்ப்பு இன்னும் உள்ளது எனவும் மேலும் தெரிவித்தார்.

