
’13’தொடர்பில் சஜித் எம்மிடம் நேரடியாகக் கூற வேண்டும்; மனோ மூலம் அல்ல என்கிறார் கருணாகரம்
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு தயாராக இருப்பதாக மனோகணேசன் ஊடாக சொல்லக்கூடாது,தமிழ் தேசியத்திற்கான தமிழ் மக்களது பிரதிநிதிகளாக இருப்பவர்களை அழைத்து அவர் கூற வேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் அமரர் ஸ்ரீ சபாரத்தினத்தின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்காரியாலயத்தில் நடைபெற்ற போது அதில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
புதியதொரு ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தல் இடம் பெற இருக்கின்றது.தற்போது களத்தில் எங்களுக்கு தெரிய ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் அநுரகுமார திசாநாயக்க என்ற மூன்று ஜனாதிபதி வேட்பாளர்கள் உள்ளனர். இவர்கள் தமிழ் மக்களுக்கு அவர்களது புரையோடிப்போயுள்ள இனப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வை காண்பதற்கு என்ன வழி என்று சிந்திப்பதை விடுத்து தமிழ் மக்களது வாக்குகளை எவ்வாறு பெறலாம் என்ற சிந்தனையிலேயே இருக்கின்றார்கள்.
கோத்தபாய ராஜபக்ஸ ஜனாதிபதியாக வரும் போது, இங்கு தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. பொருளாதார ரீதியாக அவர்கள் வலுப்பெற்றால் சரி என்றுகூறினார். தற்போது ஒரு ஜனாதிபதி கனவோடு இருக்கும் அநுரகுமார திசாநாயக்க கிளிநொச்சியில் வைத்து தான் ஜனாதிபதியானால் தமிழ் மக்களுக்கு மூன்று வேளை சாப்பாடு கொடுப்பேன் என்று கூறுகின்றார். வடகிழக்கு மக்கள் சோற்றுகாகத் தான் போராடினார்கள் என்பது அவருடைய கணிப்பு.
அதேபோன்று சஜித் பிரேமதாச 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு தயாராக இருப்பதாக கூறியதாக மனோ கணேசன் கூறுகின்றார் அதனைமனோகணேசன் கூறக்கூடாது தமிழ் தேசியத்திற்காக தமிழ் மக்களது பிரதிநிதிகளாக இருப்பவர்களை அழைத்துசஜித் பிரேமதாச கூற வேண்டும் ஆக குறைந்தது அதன் 13 ஆவது திருத்தச் சட்டத்தையாவது அந்த திருத்தச் சட்டத்தில் உள்ளதை உள்ளபடி முழுவதுமாக நான் அமுல்படுத்துவேன் என்பதனை எங்களுக்கு மாத்திரமல்ல சிங்கள மக்களுக்கும் அவர் கூற வேண்டும்.
எங்களுக்கு ஒரு கதை, வட கிழக்கிற்கு ஒரு கதை ,தெற்கிற்கு ஒரு கதை கூறாமல் பகிரங்கமாக அறிவித்து அவர்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்திலும் அதனை கொண்டு வர வேண்டும்.
ரணில் விக்கிரமசிங்க எங்களுடன் பேசும் போது பொலிஸ் அதிகாரம் தவிர்த்து ஏனையவற்றை அமுல்படுத்துவதாக கூறுகின்றார் பொலிஸ் அதிகாரத்தை தவிர்த்து ஏனைய அதிகாரங்களை அமுல்படுத்தி என்ன பிரயோசனம் என்பதனை அனுபவ ரீதியாக நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
எனவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலே நாங்கள் எங்களது பலத்தை நிரூபித்து காட்ட வேண்டும் இத்தனை இழப்புக்களுக்கு பின்பும் நாங்கள் சுயமாக செயல்படுவதற்காக தயாராக இருக்கின்றோம் எங்களது உரிமைகளை மாறி மாறி இந்த நாட்டை ஆளும் அரசுகள் பறிக்கின்றார்கள் என்பதனை நாங்கள் இந்த நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் உணர்த்த வேண்டிய தேவை இருக்கின்றது.
எங்களினால் நிறுத்தப்படும் பொது வேட்பாளர் ஜனாதிபதியாக வரப்போவதில்லை. அது அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆனாலும் எங்களால் வாக்களிக்கப்பட்டு வரும் ஜனாதிபதி எங்களுக்கு எதுவும் செய்யப் போவதில்லை.
ஏனென்றால் இந்த நாட்டிலே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மக்களினால் ஆறு பேர் தெரிவு செய்யப்பட்டி ருக்கின்றார்கள் இந்த ஆறு ஜனாதிபதிகளில் இரண்டு ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற நாங்கள் வாக்களித்திருக்கின்றோம். நாங்கள் வாக்களித்தவர்களும் எமக்கு ஒன்றுமே செய்யவில்லை நாங்கள் வாக்களிக்காதவர்களும் நமக்கு ஒன்றுமே செய்யவில்லை நாங்கள் இன்று சிதறுண்டு வெங்காய மூட்டையை அவிழ்த்து விட்டால் எவ்வாறு இருக்குமோ அவ்வாறு சிதறுண்டு போயுள்ளோம். இன்று கூட எமது பலத்தை நாங்கள் காட்டாமல் விட்டால் நாங்கள் மாத்திரமல்ல எமது எதிர்கால சந்ததி கூட நிம்மதியாக வாழ முடியாது. எனவே நாங்கள் ஒன்று பட வேண்டும் என்றார்.

