
அரசுடன் உடன்பாட்டுக்கு வாருங்கள்; சஜித், அநுரவுக்கு ரணில் அழைப்பு
நாட்டில் தற்போதைய பொருளாதார முன்னேற்றத்தை பாதுகாக்க அரசாங்கத்துடன் உடன்படிக்கைக்கு வருமாறு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு கோரிக்கை விடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மேதினக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
ஜனாதிபதி தனது மேதின உரையில் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசியக் கட்சி முடிந்துவிட்டது என்று கூறினாலும் அந்தக் கட்சியே இப்போது எழுந்து வந்துள்ளது. வீழ்ந்த நாட்டை எங்களாலேயே மீட்க முடிந்துள்ளது. இப்போது சிறந்த ஜனநாயகத்தை உருவாக்கியுள்ளோம். கொழும்பில் இப்போது அனைத்து கட்சிகளும் மேதினக் கூட்டங்களை நடத்துகின்றன. அந்தளவுக்கு இடமிருக்கின்றது. நான் சர்வாதிகாரியென்று சிலர் கூறுகின்றனர். அப்படி நான் சர்வாதிகாரியென்றால் இப்படி கூட்டங்களை நடத்த முடியுமா? எதிர்க்கட்சித் தலைவரை காலிமுகத்திடலில் விரட்டியடித்தனர். இப்போது அவர் கூட்டம் நடத்த சதாம் வீதியில் இடம் வழங்கியுள்ளோம். கோதாபய ராஜபக்ஷ முடியாது என்று கூறும் போது மற்றையவர்கள் முடியாது என்று கூறும் போது நான் பொறுப்பேற்றேன். நாட்டை கட்டியெழுப்ப உதவிய அனைவருக்கும் நன்றி கூறுகின்றேன்.
நாங்கள் இந்த இடத்திற்கு பெரும் கஷ்டத்துடனேயே வந்துள்ளோம். சில கடுமையான தீர்மானங்களை எடுக்க நேரிட்டது. சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். வட் வரி அதிகரிப்பு தொடர்பான தீர்மானம் கடினமானது என்றாலும் அதனை செய்ததன் ஊடாக ரூபாவை பலப்படுத்த முடிந்துள்ளது. இப்போது சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இந்த நிலைமையை பாதுகாப்பதா? இல்லையென்றால் மீண்டும் 2022ஆம் ஆண்டு நோக்கி போவோமா? இதனால் இந்த நிலைமையை பாதுகாக்க அரசாங்கத்துடன் உடன்படிக்கைக்கு வருமாறு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தியிடம் கேட்கின்றேன். நாடு தொடர்பில் சிந்தியுங்கள்.
சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள நிபந்தனைகள், நாட்டில் துரித அபிவிருத்திக்கான நிபந்தனைகள் உள்ளிட்ட சட்டங்களை பாராளுமன்றத்தில் முன்வைத்து அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன். அதற்கு ஆதரவளிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட கட்சிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
நாங்கள் மக்களுக்கு வழங்க வேண்டிய நிவாரங்களை வழங்கியுள்ளோம். இன்னும் முன்னால் போக வேண்டும். இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்க வேண்டும். இதற்காக இளைஞர்களுக்கு எதிர்காலத்தை வழங்கி பொருளாதாரத்தை பாதுகாக்க ஜே.வி.பி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட கட்சிகளிடமும் மற்றும் நாட்டின் அனைத்து மக்களினதும் ஒத்துழைப்பை கோருகின்றேன் என்றார்.