
2018 க்குப் பின் களைகட்டிய மேதினக் கூட்டங்கள்!; தேர்தலுக்காக பலத்தைக் காட்ட போட்டி போட்ட பிரதான கட்சிகள்
பிரதான அரசியல் கட்சிகள் தமது பலத்தை வெளிப்படுத்துவதற்காக பெருமளவில் ஆதரவாளர்களை அழைத்து வந்து ஏட்டிக்குப் போட்டியாக நேற்று புதன்கிழமை மேதினக் கூட்டங்களையும் பேரணிகளையும் நடத்தின.
2018 ஆம் ஆண்டுக்கு பின்னர் பெருமளவு ஆதரவாளர்களை திரட்டி இம்முறையே அரசியல் கட்சிகள் பெரியளவில் மேதின கூட்டங்களை நடத்தியுள்ளன.
2019 ஆம் ஆண்டில் ஈஸ்டர் தாக்குதல் காரணமாகவும், 2020, 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாகவும், 2022 ஆம் ஆண்டில் பொருளாதார நெருக்கடி நிலைமையால் நாட்டில் ஏற்பட்டிருந்த போராட்டங்களாலும் பல்வேறு கட்டுப்பாடுகளுடனேயே மேதின கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதனை தொடர்ந்து கடந்த வருடத்தில் மீண்டும் வழமைப் போன்று அரசியல் கட்சிகள் மேதினக் கூட்டங்களை ஏற்பாடு செய்திருந்தாலும் அவற்றில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிலையில் இம்முறை ஜனாதிபதித் தேர்தல்கள் மற்றும் பாராளுமன்றத் தேர்தலுக்கான அறிவித்தல்கள் வெளியாகவுள்ளதால் அரசியல் போட்டிகளுக்கு மத்தியில் பிரதான கட்சிகள் தமது ஆதரவு பலத்தை வெளிப்படுத்துவதற்காக பெருமளவான ஆதரவாளர்களை அழைத்து வந்து பேரணிகளையும் கூட்டங்களையும் நடத்தியுள்ளன. தூர இடங்களில் இருந்து பஸ்கள் மூலம் ஒவ்வொரு கட்சிகளினாலும் மேதினக் கூட்டங்களுக்கு ஆதரவாளர்கள் அழைத்து வரப்பட்டனர்.
இவ்வாறாக அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் நாடுபூராகவும் 40ற்கும் மேற்பட்ட கூட்டங்களையும் பேரணிகளையும் நடத்தியதுடன், இவற்றில் அதிகமானவை தலை நகர் கொழும்பிலேயே நடைபெற்றன. இந்தக் கூட்டங்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் மேதினக் கூட்டங்களில் பல்லாயிரக் கணக்கான ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மேதினக் கூட்டம் ”மீண்டும் வீழ்ந்திடாத அபிமானமிக்க நாடு எப்போதும்” எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மாளிகாவத்தை பீ.டி.சிறிசேன மைதானத்திற்கு முன்னால் பிரதீபா வீதியில் நடத்தப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியினால் இம்முறை பேரணி ஏற்பாடு செய்யப்படாத போதும், கூட்டத்தில் கலந்துகொள்ளவந்த ஆதரவாளர்கள் ஜனாதிபதியின் படங்களை ஏந்தியாவாறும், ஜனாதிபதிக்கு ஆதரவான கோசங்களை எழுப்பியவாறும் மருதானை, ஆமர் வீதி ஆகிய பகுதிகளின் ஊடாக சென்றனர். இந்தக் கூட்டத்தில் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, செயலாளர் பாலித ரங்கே பண்டார உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மேதினக் கூட்டம் ”வெல்லும் நாடு ஒரே பயணம்” எனும் தொனிப்பொருளில் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் பொரளை கெம்பல் மைதானத்தில் நடைபெற்றதுடன், கட்சியின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்ட பெருமளவான ஆதரவாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். எனினும் அந்தக் கட்சியினால் பேரணி நடத்தப்படவில்லை. நேரடியாக மக்கள் கூட்டத்திலேயே கலந்துகொண்டிருந்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் மேதினக் கூட்டம் ”ஐக்கிய நாடு சிறப்பான நாளை” எனும் தொனிப்பொருளில் சஜித் பிரேமதாச தலைமையில் கோட்டை சதாம் வீதியில் அமைக்கப்பட்ட பிரமாண்ட மேடையில் நடைபெற்றது. இதற்கான பேரணி புறக்கோட்டை குணசிங்கபுர பகுதியிலிருந்து நடத்தப்பட்டதுடன் இதில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவான கோசங்களை எழுப்பியவாறும், அவரின் படங்களை ஏந்தியவாறு பல்லாயிரக் கணக்கான ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருந்தனர். கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
தேசிய மக்கள் சக்தியின் மேதினக் கூட்டம் ”நாட்டைக் கட்டியெழுப்பும் தீர்வுக்கு மக்கள் சக்தி ஓரணியில்” எனும் தொனிப்பொருளில் அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் கொழும்பு தாமரைத் தடாகத்திற்கு அருகில் கன்னங்கர மாவத்தையின் வீதியில் நடைபெற்றது. இதற்கான பேரணி ஹெலலொக் வீதியில் இருந்து நடத்தப்பட்டது. இந்தப் பேரணி வழமைப் போன்று செம் மேதின பேரணியாக நடத்தப்பட்டது. இதில் அரசாங்கத்திற்கு எதிரான பாதாதைகள், கலை அம்சங்கள் என்பன இடம்பெற்றன. இதில் கட்சியின் தொழிற்சங்கங்கள், அமைப்புகள், இளைஞர் மற்றும் மகளிர் அணிகள் என்பன கலந்துகொண்டிருந்தன.
தேசிய மக்கள் சக்தியினால் கொழும்பில் நடத்தப்படும் பிரதான மேதினக் கூட்டத்திற்கு மேலதிகமாக யாழ்ப்பாணம், அனுராதபுரம் உள்ளிட்ட இடங்களிலும் பேரணிகளும் கூட்டங்களும் நடத்தப்பட்டன.
அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்க்கட்சியில் சுயாதீனமாக இயங்கும் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவநாணயக்கார உள்ளிட்டோரின் கட்சிகள் இணைந்து அமைத்துள்ள உத்தர லங்கா கட்சியின் மேதினக் கூட்டம் கிருலப்பனை லலித் அத்துலத்முதலி மைதானத்தில் நடைபெற்றது. இதிலும் பெருமளவான ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மேதினக் கூட்டம் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் கொட்டகலையில் நடைபெற்றதுடன், இதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார். இந்த கூட்டத்தில் பெருமளவான ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
அத்துடன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதினக் கூட்டம் கட்சித் தலைவர் பழனி திகாம்பரம் தலைமையில் தலவாக்கலை நகரில் நடைபெற்றதுடன், இதில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்துகொண்டு உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் பெருமளவான ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருந்தனர். ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி அணியின் மேதினக் கூட்டம் கம்பஹாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதேவேளை முன்னிலை சோஷலிச கட்சியின் மேதினக் கூட்டம் ஹைட் பார்க் மைதானத்தில் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்திலும் பெருமளவான மக்கள் கலந்துகொண்டிருந்தனர். தமிழ் கட்சிகளால் வடக்கு, கிழக்கில் பல இடங்களிலும் மேதின நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
அதேபோன்று வழமைப் போன்று தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் பல்வேறு இடங்களில் மேதின கூட்டங்களை நடத்தியிருந்தன.
வழமையை விடவும் அதிகளவான மேதின நிகழ்வுகள் இம்முறை நடைபெற்றதுடன், சில கட்சிகள் இசை நிகழ்ச்சிகளை நடத்தி ஆதரவாளர்களை ஆட்டம், பாட்டு என மகிழ்விக்கவும் செய்துள்ளன.
மேதின கூட்டம் மற்றும் பேரணிகள் நடைபெற்ற பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.