
நாட்டை விட்டு வெளியேறேன்
இலங்கையில் இருந்து வெளியேறி வசிப்பதற்காக தான் தென்கொரியா போகவுள்ளதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தன்னைப் பற்றி வெளியாகும் செய்திகள் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
”நான் தென்கொரியாவுக்கு போகப் போவதாக பல்வேறு ஊடகங்கள் ஊடாக பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக அறிந்தேன். அந்த செய்திகளில் எந்த உண்மையும் கிடையாது. தென்கொரியாவுக்கோ அல்லது உலகில் வேறு எந்த நாட்டுக்கோ வசிப்பதற்காக நான் போக வேண்டிய தேவை எனக்கு கிடையாது”.
அரசியல் எதிரிகளால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான பொய்ப் பிரசாரங்களை நான் வன்மையாக நிராகரிக்கின்றேன்.
நீதிமன்றத்தின் தடை உத்தரவு இருப்பதால், கம்பஹா மாநகர சபையில் உலக தொழிலாளர் தினத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் ஏற்கனவே ஏற்பாடு செய்துள்ளதாகவும் மைத்திரிபால சிறிசேன தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.