
அம்பிட்டிய தேரரையும் உள்ளே தள்ள வேண்டும்
மதத்தை வைத்துக்கொண்டு இனவாதம் நடத்திய ஞானசார தேரருக்கு நிகழ்ந்ததைப் போன்று இனவாதப் போக்குடைய அம்பிட்டிய தேரரையும் சிறையில் அடைக்க வேண்டும் என வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
கல்முனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்கள் தொடர்பாகவும் தமிழர்களது சமயம், கலாசாரம் தொடர்பாகவும் மிக மோசமான கருத்துக்களை வெளியிட்டு வந்துள்ள ஒருவர் ஞானசார தேரர் .ஆகவே இவருக்கு வழங்கப்பட்டுள்ள 4 வருட கடூழிய சிறைத்தண்டனை வரவேற்கக்கூடிய ஒன்று. இந்த தீர்ப்பின் மூலம் மக்களுக்கு சட்டத்துறை மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது.
இதேபோன்று மட்டக்களப்பிலும் அம்பிட்டிய தேரர் இருக்கின்றார். அவரைப் போன்று இன்னும் சிலர் இனவாதப் போக்குடையவர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கும் இது போன்று தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.