
பாராளுமன்றத் தேர்தலில் குதிப்பது யார்?; ராஜபக்சக்களை வைத்து பந்தயம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிடவுள்ள ராஜபக்சக்கள் யார் என்பது தொடர்பாக ஆளும் மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் அரசியல் பந்தயம் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பந்தயத்தில் இடம்பெற்றுள்ளவர்கள் மற்றும் பந்தயத் தொகை தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லையாயினும் திரைமறைவில் பந்தயத்துக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் மஹிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, சமல் ராஜபக்ச மற்றும் சசீந்திர ராஜபக்ச ஆகியோரில் அடுத்த பாராளுமன்றத் தேர்தலின் மூலம் மீண்டும் தெரிவு செய்யப்படுபவர்கள் யார் என ஒரு குழுவினர் பந்தயத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் மற்றொரு குழுவினர் பசில் ராஜபக்ச மீண்டும் பாராளுமன்றத்துக்கு வருவாரா, இல்லையா என பந்தயத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையிலேயே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிடவுள்ள ராஜபக்சக்கள் யார் என்பது தொடர்பாக இரு குழுக்களிடையே பரபரப்பு விவாதங்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்சவுக்கான வாக்கு பலம் தற்போதும் இருப்பதால் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நாமல் ராஜபசவை வெற்றிபெறச் செய்ய அவர் முயற்சிப்பார் என்பதால் நாமல் ராஜபக்ச மீண்டும் பாராளுமன்றத்துக்கு வருவது உறுதி என பலரும் கருதுகின்றனர்.
இதேவேளை நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளுக்குப் பின்னர் ராஜபக்சக்கள் மீதான மக்களின் எதிர்ப்பு அதிகரித்துள்ள போதும், கிராம மட்டத்தில் அவர்களுக்கான செல்வாக்கு இன்னும் குறையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பியுள்ள பசில் ராஜபக்ச எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்வதற்கு தொகுதி அமைப்பாளர்களையே பெரிதும் நம்பியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.