
யாரது நோக்கத்தை நிறைவேற்ற யாரிடம் மைத்திரி சிக்கியுள்ளார்?
எவருடையதேனும் அரசியல் நோக்கத்தை நிறைவேற்றும் திட்டத்திற்குள் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிக்கியுள்ளரா? என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கருத்து தொடர்பில் பலரும் அவரைபற்றி கூறுகின்றனர். இதுவொரு அரசியல் வெடிகுண்டாகும். அடுத்த விளையாட்டின் ஆரம்பமே இதுவாக இருக்கும் என்றே நான் நினைக்கின்றேன். இது தொடர்பாக கவனமாகக் கையாள வேண்டும். யாரோ ஒருவரின் அரசியல் நோக்கத்திற்காக வீசப்பட்ட பந்தாகவே பார்க்கின்றேன். இதற்கு பின்னரான அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்று பார்க்க வேண்டும்.
அடுத்ததாக ஆட்சியை பெற்றுக்கொள்வதற்காக ஏதேனும் தரப்பினரின் திட்டமாகவும் இருக்கலாம். இதனால் மைத்திரிபால சிறிசேன வீசிய பந்துக்கு யார் முகம்கொடுக்கப் போகின்றனர் என்று பார்ப்போம் என்றார்.