
மாற்றம் வருமா?
தமிழர்களின் அரசியல் வரலாற்றில், 74 ஆண்டுகால பாரம்பரியம் மிக்கதும், இருக்கும் அத்தனை தமிழ்க் கட்சிகளில் பெரியதுமான தமிழரசுக் கட்சி தனக்கென ஒரு புதிய தலைவரைத் தெரிந்தெடுத்துள்ளதுடன் புது வருடம் ஆரம்பித்துள்ளது.இந்த 74 கால வரலாற்றில் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவினரால் ஏகமனதாகத் தேர்தெடுக்கப்படுபவர் தலைமையேற்றதுதான் வழமையாக இருந்து வந்துள்ள நிலையில், முதல்முறையாக ஜனநாயக ரீதியில் தேர்தல் நடத்தப்பட்டு தலைமை தெரிவுசெய்யப்பட்டது என்பது ஒரு புதிய முறைமைதான்.
கடந்த பதினான்கு வருடங்களாகவேஇதே தலைமைமைப் பதவிக்கு தம்மைத் தயார்படுத்தி, அதற்கெனவே திட்டமிட்டு காய் நகர்த்திக் கொண்டிருந்தவர்தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் சுமந்திரன்.இவருக்கும், பாராளுமன்றில் தமிழ்த் தேசியத்திற்காக காரசாரமாக குரல் கொடுக்கும் சிறிதரன் அவர்களுக்கும் இடையில் தலைமைக்கான தேர்தலில் கடும் போட்டி நிலவியது.
சுமந்திரன் ஆங்கில மொழிப்புலமை உள்ளவர். சட்டம் படித்தவர். பல நாடுகளுக்கு சென்று ராஜதந்திர பேச்சுகளில் கலந்து கொண்டவர். பன்னாட்டு தூதுவர்களுடன் தொடர்புகளைப் பேணி வருபவர்.கொழும்பை மையப்படுத்திய அரசியல் செய்துவருபவர். மாறாக, சிறிதரன் இந்த விடயங்களில் சற்று பின்தங்கிய நிலையில்தான் உள்ளார். ஆனால், அவர் வடக்கு, கிழக்கை பிரதிபலிப்பவர். அவரது கோட்டையாக கிளிநொச்சி உள்ளது. தாயகத்தில் நின்று செய்யும் அரசியல் அவருடையது.இதனால் பலரும் சுமந்திரன் அவர்களின் வெற்றி உறுதி என்ற மிதப்பில் இருந்த வேளையில், அதனைப் பொய்யாக்கி தேர்தலில் தலைமையைத் தக்க வைத்துக் கொண்டார் சிறிதரன்.
பாரம்பரியமிக்க தமிழரசுக் கட்சியின் பெயரில்தான் ‘தமிழ் அரசு’ இருக்கின்றதே ஒழிய, தமிழர்க்கான அரசு அமைக்கும் எந்தவொரு செயற்பாட்டிலும் இந்தக் கட்சி ஈடுபட்டதில்லை. தேர்தல் காலத்தில் செயற்படும் கட்சியாக மட்டுமே இயங்கி வந்தது அக்கட்சியின் அடிப்படைத் தோல்வி. தமிழரசுக் கட்சி ஒரு சிலரைக் கொண்ட ஒரு குழுவின் கட்டுப்பாட்டில் இதுவரை காலமும் இயங்கி வந்ததும், தலைமைகள் கொழும்பில் தங்கி கொழும்பு சார் அரசியல் செய்ததும் மக்கள் இக் கட்சியில் பெருமளவில் நம்பிக்கை வைக்க முடியாமல் இருந்ததற்கு ஒரு முக்கிய காரணம்.
எங்களிடத்தில் தங்கியிருந்து எங்களுக்கு சேவை செய்வதை விடுத்து, எதிரிக்கு துணையாக வேலை செய்வது என்பது மக்களை முடிவெடுக்க வைக்கும். தமிழ்த் தேசியம் பேசும் சிறிதரனின் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். மக்கள் இன்னமும் தமிழ்த் தேசியத்தின்பால் ஆர்வமாக இருக்கிறார்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
தலைமைக்கான தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், ‘நான் என்னுடைய முழுமையான ஒத்துழைப்பை சிறிதரனுக்கு வழங்கி செயற்படுவேன்’ என்ற சுமந்திரனின் கூற்று,இன்னமும் கட்சிக்குள் தான் பலம் பொருந்திய நிலையில் இருப்பதை வெளிக்கூறுவதாகவே எண்ணத் தோன்றுகிறது. அப்படியாயின், சிறிதரனின் தலைமைத்துவ வேலை இலகுவாக இருக்கப் போவதில்லை. அவரின் புதிய தலைமைமீது சுமந்திரன் பாரதூரமான செல்வாக்குச் செலுத்தவும் கூடும்.
தனித்துவமான ஒரு தலைவராக கட்சியை வழிநடத்த வேண்டுமென்றால் சிறிதரன் போராட வேண்டியிருக்கும். அதிலும், இதுவரை காலமும்தேர்தலுக்காக மட்டுமே இயங்குபவர்களாக மாறிப் போயிருந்த பலதரப்பட்டவர்களையும் கொண்டிழுப்பது கஷ்டமான காரியம்தான். திட்டமிட்டு, தனக்கான பாதையை திறம்பட வகுத்து,அதன்வழி சென்று வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு சிறிதரனுக்கு உண்டு.
சுமந்திரனும் கட்சியில் இருக்கும் வேறு பலரும் சட்ட நுணுக்கங்கள் தெரிந்தவர்களாக இருக்கலாம். மொழிப் புலமை மிக்கவர்களாக இருக்கலாம். சிறிதரன் இவற்றில் பின்தங்கிவிட்டார் என்று எண்ணவும் கூடும்.
ஒரு தலைமை என்பது அத்தனை அறிவுசார் விடயங்களையும் தன்னகத்தே கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. கற்றோரையும், அந்தந்தத் துறைகளில் புலமை மிக்கோரையும் தம்மோடு சேர்த்து அவர்களின் உதவியுடன்நிர்வாகத்தை திறம்பட நடத்தும் தலைமைத்துவ ஆளுமை கொண்டவராக இருக்க வேண்டியதுதான் ஒரு தலைமைக்கான பண்பு. ஒரு தனிநபரில் தங்கியிருக்க வேண்டிய தேவையில்லை.
வரும் காலத்தில், சிறிதரன் சுமந்திரனின் உதவியை நாடும்போது,சுமந்திரனே கட்சியின் முக்கிய ஆளாக மாற, சிறிதரன் பெயருக்கு மட்டுமே தலைவராக இருக்கும் நிலை தோன்றவும் வாய்ப்புண்டு. மாறாக, ஒரு ஆளுமை மிக்க தலைவராக,புத்திஜீவிகளின் உதவியுடன் கட்சியிலும் மக்களிடத்திலும் மாற்றத்தை கொண்டுவர முடியும். அந்த சந்தர்ப்பத்தில் சுமந்திரனுக்கும் சிறிதரனுக்கும் பிளவு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
இதில் எந்த வழியை சிறிதரன் தேர்ந்தெடுக்கப் போகிறார்? எடுப்பார் கைப் பிள்ளையாக இல்லாமல் ஒரு தனித்துவமிக்க தலைமையை சிறிதரன் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.