
சாதனைப் பெண்ணே…!
விருதுகள் அனைத்தும்
உன்னை கண்டு
வியந்து நிற்கின்றன..
பரிசுகள் எல்லாம்
உன்னை போற்றி
பா இசைக்கின்றன..
வாழ்த்துக் கூட
உனனை கண்டு
வணங்கி வழிவிடுகிறது..
பொன்னாடைகள் ஒவ்வொன்றும்
உன்னை தழுவ
வரம் கேட்கின்றன…
பதக்கங்கள் வரிசையில்
உன்னுருவை பட்டியலிட
புதுப் பரிமாணம் எடுக்கிறது…
சாதனைப் பெண்ணே…
நீ காலத்தின்
தேவை அல்லவா…?
முகத்திரைக்குள் – தன்
முகவரி மறைத்தவள்
இன்று முழு உலகும்
தன் பெயர் பதிக்கிறாள்!
கனவுகள் மெய்ப்படவே
கருவறை வளர்க்கிறாள்!
பாரதி கண்ட
புதுமை பெண்ணையே
பிரசவித்து போகிறாள்!
வள்ளுவனின் பொருளாகி
வாழ்ந்து நிறைகிறாள்!
கம்பன் தந்த சீதையை
கடைக்கண்ணில் சுமக்கிறாள்!
கண்ணகியின் நகலாகி
கண்முன்னே வருகிறாள்!
பெண்ணே – நீ
பேசு பொருள் தான்..
பெற்றோர் மத்தியில்
நீ பேர் சொல்லும்
மகளாகிறாய்..
புகுந்த வீட்டில்
நீ குலம் காக்கும்
குல தெய்வம் ஆகிறாய்..
குழந்தைப் பேற்றில் – நீ
குடும்பம் தளைக்க வந்த
தாய் ஆகிறாய்..
பெண்ணே – நீ
பேசு பொருள் தான்..
நம்பிக்கை எனும்
சிறகுகள் விரித்து,
ஆளுமைகளை தன்
அடையாளங்களாக்கி,
நட்சத்திர மாலை அணிந்து,
நிலவை நெற்றி திலகமிட்டு,
சூரியனை சுடர்விடும்
பேனையாக்கி
உலகுக்கு
புதுச் சேதி சொல்லிவிடு..
பெண்கள்
சாதிக்கவே பிறந்த
பெண் மெய்கள் என…..
Malini