
இன மோதலை உருவாக்க தமிழ் எம்.பிக்கள் முயற்சி
வவுனியா வெடுக்குநாறிமலை விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்திற்கும் தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்சவுக்கும் இடையே சபையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் மகாசிவராத்திரி தினத்தில் பூஜையில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டமையை கண்டித்து நேற்று செவ்வாய்க்கிழமை சபையில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னெடுத்த போராட்டத்தை தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சையின் போது, இன மோதல்களை உருவாக்கும் வகையில் தமிழ் எம்.பிக்கள் செயற்படுவதாக வீரவன்ச தெரிவித்ததை தொடர்ந்தே இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் உருவாகியது.
விமல் வீரவன்ச முதலில் உரையாற்றும் போது கூறுகையில்,
வவுனியாவில் வடுனாகல என்ற புராதன வழிபாட்டிடம் உள்ளது. வெடுக்குநாறிமலை என்றும் அதனை கூறுவர். இது 2ஆம் நூற்றாண்டுக்கும் முற்பட்ட பௌத்த தொல்பொருள் இடமாகும். இந்த இடத்தில் சிவ பூஜை நடத்துவதற்கு நீதிமன்றத்தினால் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் இங்கே மத மோதலை ஏற்படுத்துவதற்காக புராதன பௌத்த தொல்பொருள் இடத்திற்கு சென்று தேவையில்லாத மோதல்களை ஏற்படுத்தி வருகின்ற தேர்தலில் இனவாத, மதவாத வாக்குகளை பெற்றுக்கொள்ளவே முயற்சிக்கின்றனர். இதற்கு எவரும் அடிபணியக் கூடாது. தொல்பொருள் அதிகாரிகளை பலிக்கடாவாக்க வேண்டாம்.
குறித்த இடத்தில் அண்மைக்காலமாக சில இனவாத, மதவாத குழுக்கள் வேறு மத பூஜைகளை நடத்துகின்றனர். சம்பவ தினத்தன்று மாலை 6 மணி வரையில் பூஜைநடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும் அவர்கள் அதற்கு மேலும் தொடர முயற்சித்துள்ளனர். தொல்பொருள் திணைக்களம் சட்டவிரோத செயற்பாடு நடந்தால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவே இருக்கின்றது. இது பௌத்த புராதன இடமாகும். இங்குள்ள பௌத்தர்கள் இந்துக்களின் இடத்திற்கு சென்று பூசை நடத்துகின்றனரா?
குறிப்பாக வடக்கு, கிழக்கில் உள்ள இனவாத அரசியல்வாதிகளை தமிழ் மக்கள் நிராகரிக்கின்றனர். அவர்களின் காலமும் முடிகின்றது. இதனால் அதனை மாற்றி வேறு வழியில் கொண்டு செல்லவே இவ்வாறாக அரசியல்வாதிகள் செயற்படுகின்றனர். இவ்வாறான இடங்களுக்கு சென்று இன மோதல்களை ஏற்படுத்தவே இவர்கள் முயற்சிக்கின்றனர். இதற்கு இடமளிக்கக் கூடாது என்றார்.
இதற்கு பதிலளித்த சாணக்கியன் எம்.பி கூறுகையில்,
வெடுக்குநாறிமலையில் வழிபாடுகளை நடத்த நீதிமன்றத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அங்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொல்பொருள் இடங்களுக்கு சேதம் ஏற்படும் என்று இவர்கள் கூறுகின்றனர். ஆனால் அங்கு சேதம் ஏற்படவில்லை என்று பொலிஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இங்கு வேறு மோதல்கள் நடக்கவில்லை.
இந்நிலையில் இவர்களை போன்றோருக்கு வாக்கு கேட்டு செல்ல இடமில்லாது போயுள்ளது. இவர்கள் போன்ற இனவாதிகளை இந்த நாட்டில் இருந்து அகற்ற வேண்டும் என்றார்.
இவ்வேளையில் மீண்டும் எழுந்த விமல் வீரவன்ச கூறுகையில்,
இவர்கள் சபையை திசைதிருப்புகின்றனர். இவர்கள் கூறுவது முற்றிலும் பொய்யே. பொலிஸாரே வழங்கு தொடர்ந்துள்ளனர். சிவ பூஜையென்று கூறி மிகப்பெரிய பூஜையையே நடத்த முயன்றுள்ளனர். இதனால்தான் பிரச்சினை ஏற்பட்டது. இங்கே மோதல்களை ஏற்படுத்தி நன்மையடைய முயற்சிக்கின்றனர் என்றார்.