
இந்திய துணைத் தூதரகத்துக்கு அப்பால் யாழில் மீனவர்கள் உண்ணாவிரதம்
யாழ் இந்திய துணை தூதரகம் முன் நேற்று செவ்வாய்க்கிழமை காலை உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட ஆயத்தமான மீனவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியதுடன் தூதரக வாசலில் இருந்து அப்புறப்படுத்தினர் .
இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட மீனவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். யாழ் இந்திய துணைத் தூதரகம் முன்பாகவே இந்த உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்க இருந்த போதும் பொலிஸார் அதற்கு அனுமதி வழங்காததால் துணைத் தூதரகத்துக்கு சற்று அப்பால் இந்தப் போராட்டத்தை அவர்கள் ஆரம்பித்துள்ளனர்.
யாழ் மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ் மாவட்ட கடற் தொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து நேற்றுக் காலை முதல் யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்திற்கு முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று காலை 9.30 மணிக்கு மருதடி சந்தியில் இருந்து பேரணியாக யாழ் இந்திய துணைத் தூதரகம் நோக்கி சென்ற மீனவர்கள் துணைத் தூதரகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
எனினும் அவ் இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் தூதரகம் முன் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தனர்.
இதன் போது முரண்பட்ட மீனவர்கள் தமது கோரிக்கை தூதரகத்திற்கு தெரிய வேண்டும் போராட்டத்திற்கு அனுமதிக்குமாறு கோரினர்.
இந் நிலையில் ஐந்து நிமிடம் தூதரகம் முன் நில்லுங்கள் எனக் கூறிய பொலிஸார் பின்னர் மீனவர்களை அவ் விடயத்தில் இருந்து அப்புறப்படுத்தினர்.
அவர்களை பொலிஸார் அங்கிருந்து வெளியேற்றியதை அடுத்து அவர்கள் யாழ் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்திற்கு முன்பாக தமது உணவு தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.