
மன்னார் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தால் மன்னாரில் இலட்சக்கணக்கான பறவைகளுக்கு பெரும் ஆபத்து
உத்தேச மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தினால் இலட்சக்கணக்கான பறவைகள் ஆபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் இந்தத் திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று வனவிலங்குகள் மற்றும் சுற்றாடல் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர் பெருக்கம் இன்றியமையாதது. கொள்கை உருவாக்கத்தில் மனித வளத்துக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைத்தாலும், கொள்கைகளை உருவாக்கும் சபைகளில் சுற்றுச்சூழல், வனம், தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை.எனவே தீர்மானங்களை எட்டும் போது மனித வளத்தைப் பாதுகாத்துக் கொண்டு, வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் வளங்களைப் பாதுகாத்து, சவால்கள் மற்றும் இலக்குகள் இரண்டையும் வெற்றி கொள்ளும் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
வனவிலங்குகளின் பரவல் மற்றும் அவற்றின் நடத்தை முறைகளில் ஏற்படும் மாற்றங்களால் வனவிலங்குகளின் வாழ்விடங்கள் துண்டு துண்டாக மாறுவதுடன், நில பயன்பாடு மற்றும் பரப்பில் ஏற்பட்ட மாற்றம், மனித-வனவிலங்கு மோதல்கள் தற்போதைய நிலைக்கு அதிகரித்ததற்குக் காரணமாகும். இதன் காரணமாக மாறாத தேசிய நிலப் பயன்பாட்டுத் திட்டம் தேவை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மனித மற்றும் வனவிலங்கு பிரச்சினை நம் நாட்டில் பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. 2024 உலக வனவிலங்கு தினத்தில் வன வளப் பாதுகாப்பை விட வனவிலங்கு பாதுகாப்பில் கவனம் செலுத்துவதில் சிக்கல் இருப்பது தெரியவந்தது. இவ்விரண்டையும் இங்கு நடைமுறைப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
உத்தேச மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தின் கீழ் 250 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், இதற்காக புதிதாக 52 காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளமையினால் இது பறவைகளின் நடமாட்டத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனவே, இந்த மின் உற்பத்திக்கான இடத்தை மாத்திரம் மாற்றியமையுங்கள்.
இந்த பகுதியானது 30 நாடுகளில் இருந்து இடம்பெயரும் 250 வகையான பறவைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 15 மில்லியன் பறவைகளுக்கு ஒரு முக்கியமான குளிர்கால இடப்பெயர்ச்சி பிரதேசமாகும். இந்தப் பகுதியில் பறவைகளுக்கான இடம்பெயர்வு பாதையொன்று உள்ளதால், இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
ஆசியா முழுவதுமே வளமான பறவைகள் நிறைந்த பகுதியான இங்கு முறையான சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்படவில்லை. இது முக்கிய நீர்ப்பறவைகள் நிறைந்த பகுதியாகும். இடம்பெயரும் காலத்தில் இலட்சக்கணக்கான பறவைகள் வந்து சேர்கின்றன. இந்த திட்டத்தில் குறைபாடுள்ள சுற்றுச்சூழல் அறிக்கை பயன்படுத்தப்பட்டு,
முக்கியத்துவ மிக்க சுற்றுச்சூழல் இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதால், இந்த மின் உற்பத்தி திட்டத்தை மாற்றுப் பகுதிக்கு எடுத்துச் செல்லுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.