இந்திய- சீன ஆதிக்கப் போட்டியால் இலங்கை அழிந்துவிடும் ஆபத்து; பிரபாகரனிடம் இருந்தவை சிங்களத் தலைவர்களிடம் இல்லை

இந்திய- சீன ஆதிக்கப் போட்டியால் இலங்கை அழிந்துவிடும் ஆபத்து; பிரபாகரனிடம் இருந்தவை சிங்களத் தலைவர்களிடம் இல்லை

யுத்தத்தின் மத்தியிலும் தமிழர் தேசத்தில் சிறந்த பொருளாதாரத்தையும் பாதுகாப்பு சூழலையும் பிரபாகரனினால் கட்டியெழுப்ப முடிந்தமைக்கு அவரிடம் இருந்த உண்மையும் நேர்மையும் அர்ப்பணிப்பும் தான் காரணம். இந்த மூன்றும் சிங்களத் தலைவர்களிடம் இல்லாதமையே யுத்தம் முடிந்தும் 14வருடங்களாக நாட்டை கட்டியெழுப்ப முடியாமைக்கு காரணம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எம்.பி.யான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

அத்துடன் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் மிகத் தீவிரமடைந்து கொண்டிருக்கும் ஆதிக்கப் போட்டியில் நாம் சிக்கி சின்னாபின்னமாகி நாடு அழிந்து போகும்நிலைதான் ஏற்படும் என்றும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமர்வில் பிணைப் பொறுப்பாக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் சட்டமூலம்,நம்பிக்கைப் பொறுப்பு பற்றுச்சீட்டுக்கள் (திருத்தச் ) சட்டமூலம் உள்ளிட்ட ஏழு சட்டமூலங்கள் மீதான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்

காலம் காலமாக பல்வேறு சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. அவ்வவ்போது சட்டத் திருத்தங்களும் கொன்டு வரப்படுகின்றன. ஆனால் நாடு முன்னேற்றப்பாதையில் சென்றுள்ளதா எனப்பார்த்தால் இல்லை.நாடு அதலபாதாளத்தில் வீழ்ந்து கடனை செலுத்த முடியாமலும் மக்கள் வாழ முடியாமலும் பட்டினி, மரணத்தோடு போராடுகின்ற தூரதிர்ஷ்டவசமான நிலையில்தான் நாடு உள்ளது.

இந்த நாட்டை சரியான பாதையில் கட்டி எழுப்புவது தொடர்பான சிந்தனையுள்ள தலைவர்கள் இல்லாத காரணத்தினால் தான் நாடு தொடர்ச்சியான பின்னடைவை சந்திக்கின்றது.

இந்த நாட்டை கடந்த 75 வருடங்களில் நீங்கள் பின்னோக்கி பார்த்தீர்களானால் நீங்கள் எமது தேசத்தின் மீது பாரிய இன அழிப்பை கட்டவிழ்த்து விட்டிருந்தீர்கள். அந்த இன அழிப்புக்கு எதிராக வட, கிழக்கு தமிழர் தேசத்தை பாதுகாப்பதற்காக எமது தேசியத் தலைவர் பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தை நடத்தியிருந்தார். உங்கள் அரசின் பாதுகாப்பு செலவுக்கு, படைகளுக்கு ஈடு கொடுத்துத்தான் அந்தப் போரை பிரபாகரன் நடத்தியிருந்தார்.

அந்தப் போராட்ட காலப் பகுதியில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக வடக்கு,கிழக்கில் ஒரு நடைமுறை அரசை அவர் நிறுவியிருந்தார். இங்கு ஒரு பொருளாதார செழுமை ஒன்றை நாங்கள் அதாவது தமிழ் மக்கள் அனுபவித்துள்ளோம். பொருளாதார ரீதியிலான ஸ்திரத்தன்மையுடன் மக்கள் மிகப் பாதுகாப்பான சூழலில் வாழ்ந்த வரலாறு அங்குள்ளது.

யுத்த முடிவில் நீங்கள் ஒரு இன அழிப்பை செய்து அந்த பிரதேசத்தை கைப்பற்றியபோது எவ்வளவு பெரும் தொகையான தங்கங்களை கைப்பற்றினீர்கள் .அவை எந்தளவு நேர்த்தியாக அங்கு தமிழீழ வைப்பகத்தினால பேணிப் பாதுகாக்கப்பட்டன என்பதும் உங்களுக்குத் தெரியும்.

நான் ஏன் இதனை இங்கு குறிப்பிடுகின்றேன் என்றால் நீங்களும் யுத்தம் செய்தீர்கள். உங்கள் இன அழிப்பிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள எங்கள் இனமும் யுத்தம் செய்தது.அந்த யுத்த சூழலுக்குள்ளும் எங்களது தேசம் பொருளாதார தடைகளுக்கு மத்தியில் பொருளாதார ரீதியாக தனக்கு கிடைத்த வளங்களை பயன்படுத்தி தன்னை வளர்த்துக்கொள்ளக்கூடியதாக ,பொருளாதாரத்தை தக்க வைத்துக் கொள்ளக்கூடியதாக இருந்தது என்று சொன்னால் அதற்கு பிரதான காரணம் உண்மையும் நேர்மையும் அர்ப்பணிப்பும் உள்ள தலைவர் எங்களுக்கு இருந்தார்.

ஆனால் நீங்கள் உலகமெங்கும் பெரும்தொகை நிதிகளைப் பெற்று இந்த யுத்தத்தை செய்தும் கூட யுத்தம் முடிந்து 16 வருடங்கள் கடந்தும் உங்கள் நாடு அதல பாதாளத்தில் விழுந்திருக்கின்றது என்றால் உங்களின் தலைவர்களிடம் நேர்மை இல்லை.அடுத்து இந்த தீவில் இருக்கக்கூடிய அனைத்து சமூகங்களையும் அரவணைத்து செல்லக்கூடிய மனப்பான்மை உங்களிடம் இல்லை. ஆகவே உங்களின் போக்கில் நீங்கள் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

அடுத்த ஜனதிபதி தேர்தலுக்கு தயாராகி கொண்டிருக்கின்றீர்கள் பல வேட்பாளர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. ஆனால் எந்தவொரு வேட்பாளரும் வடக்கு,கிழக்கு தமிழ் மக்களை உள்வாங்குகின்ற வகையில் ஒற்றையாட்சி முறையை ஒழித்து சமஷ்டியை கொண்டுவந்து நாட்டை ஐக்கியப்படுத்துவது தொடர்பில் இதுவரையில் வாய் திறக்கவில்லை. எங்களது குடிப்பரம்பலை மாற்றியமைப்பதற்கான வேலைத் திட்டங்கள்தான் தீவிரமடைந்துள்ளன.

இவ்வாறுதான் நிலைமைகள் தொடரப்போகின்றது என்று சொன்னால் உங்களினால் ஒருபோதும் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது. இந்த பூகோள ஆதிக்கப்போட்டி இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் மிகத் தீவிரமடைந்து கொண்டிருக்கின்றது இந்தப் போட்டியில் நாம் சிக்கி சின்னாபின்னமாகி நாடு அழிந்து போகும்நிலைதான் ஏற்படும் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )