
தமிழருக்கு எதிரான போருக்கு ஜே.வி.பி. ஆதரவு வழங்கியது; அனுர ஒப்புக்கொள்கிறார்
தமிழ் மக்களுக்கு எதிரான போருக்கு குறிப்பாக இறுதிகட்ட முள்ளிவாய்க்கால் போருக்கு ஜே.வி.பி. ஒத்துழைப்பு வழங்கியது என்பதை அனுரகுமார திசாநாயக்க ஒப்புக் கொண்டுள்ளதாக இணையத்தளமொன்று தெரிவித்துள்ளது.
கொழும்பிலுள்ள தனியார் இலத்திரனியல் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், ஜே.வி.பி. மற்றும் அதன் கூட்டணியான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இதனை ஒப்புக் கொண்டுள்ளார்.
தமிழர்களுக்கு எதிரான ஒரு தலைவரை கொண்டுவர வேண்டுமென்ற பிரசாரத்துடன் 2005ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், தமது கட்சி ஆதரவு வழங்கிய விடயத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
“எமது நாட்டின் வரலாற்றில் அனைத்து அரசியலும் அடுத்தவர்களுக்கு எதிராக இருந்தது. 2005இல் மஹிந்த தமிழர்களுக்கு எதிராக அதிகாரத்தை பெற்றுக்கொள்கிறார்.
அப்போதிருந்த அந்த அரசியல் சூழல் அதுதான்.
அப்போது தமது ஆதரவை, மஹிந்தவுக்கு வெளிப்படுத்திய மக்கள் விடுதலை முன்னணியின் சோமவன்ச அமரசிங்க, “தமது கட்சி போருக்கு அஞ்சவில்லை” எனவும், “போருக்கு அஞ்சினால் சமாதானத்தை ஏற்படுத்த முடியாது,” எனவும் தெரிவித்திருந்தார்.
2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ச முதன்முறையாக ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியபோது, மக்கள் விடுதலை முன்னணி, புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆதரவை வெளிப்படுத்தியதோடு அவருக்கு ஆதரவாக பிரச்சாரத்திலும் ஈடுபட்டது.
ஜூலை 2006இல் மஹிந்த ராஜபக்ச யுத்தத்தை மீண்டும் ஆரம்பித்த பின்னர், மஹிந்தவின் பெரும் இராணுவ வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாகவும் மக்கள் விடுதலை முன்னணி வாக்களித்திருந்தது.
2010ஆம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ச தமிழர்களை தோற்கடித்த உத்வேகத்துடன் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றதாகவும் அநுர குமார திசாநாயக்க இந்தச் செவ்வியில் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.