
முதலில் வட, கிழக்குத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு; பின்னர் மலையகத் தமிழர் ,முஸ்லிம்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்கிறார் ஜனாதிபதி
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம். அதன்பின்னர் மலையக தமிழ் மக்களதும், முஸ்லிம் மக்களதும் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் எனத்தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்காற்றிய மலையக தமிழ் மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை நிலைநாட்ட அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுமெனவும் உறுதியளித்தார்.
கட்சி பேதமின்றி மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் பிரதிநிதிகளையும் ஒன்றிணைத்து செயற்படுத்த எதிர்பார்க்கும் முன்மொழிவுகளை அடுத்த மாதத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் தோட்டத் தொழிலாளர்களுக்காக 10,000 வீடுகளை நிர்மாணிக்கும் ‘பாரத் – லங்கா’ வீடமைப்புத் திட்டத்தின் நான்காம் கட்டம் ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து நேற்று திங்கட்கிழமை நிகழ்நிலை மூலம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் பேசுகையில்
”10 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கான முதல் கட்டமாக 1300 வீடுகளுக்கான அடிக்கல் நடப்பட்டுள்ளது. இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் நன்கொடைகளைப் பயன்படுத்தி இந்தத் திட்டத்தை முன்னெடுக்கிறோம். மலையக தமிழ் மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இந்திய அரசாங்கம் இந்த வீட்டுத்திட்டத்தை வழங்கியது. அதற்காக இந்திய அரசுக்கு மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அத்துடன் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்காற்றிய மலையக தமிழ் மக்கள் தங்களுக்கென காணியும் வீடும் இல்லாமை பெரும் குறைபாடாக இருந்தது. உண்மையில், குறிப்பிட்ட காலம் அவர்களுக்கு வாக்குரிமை கூட இருக்கவில்லை. அந்த அரசியல் உரிமைகள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளன. எனினும், பொருளாதார, சமூக உரிமைகளை வழங்க வேண்டியிருக்கிறது. இதில் ஒரு பகுதியை நாம் இன்று முன்னெடுத்துள்ளோம்.
வீடுகளை அமைப்பதற்கு காணிகளைப் பெற வேண்டியுள்ளது. இதற்காக தோட்டக் கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளது. சில நேரம் அரச காணிகளை வழங்க நேரிடும். இதற்கமைய வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். அடுத்து மலையக தமிழ் மக்களின் கல்வி நிலைமை ஏனைய பிரசேதங்களை பின்தங்கி இருக்கிறது. தமிழ் பிரதேச பாடசாலைகளை, ஏனைய பாடசாலைகளின் நிலைமைக்கு நிராக மேம்படுத்துவதற்கான வேலைத் திட்டத்தை அனைத்துப் பிரதேச செயலகங்கள் ஊடாகவும் முன்னெடுக்கத் திட்டமிட்டு வருகிறோம்.
மலையகத்தில் வாழும் அனைவரும் தோட்டத் தொழிலாளர்களல்ல. கல்வி பெறுவதற்கான உரிமையை உறுதி செய்வதோடு தொழிற்பயிற்சி பெறுவதற்கான வசதிகளை இளைஞர் யுவதிகளுக்கு வழங்க வேண்டும். தோட்டத் தொழிலாளர்களாக அவர்களை தொடர்ந்து வைத்திருக்க முடியாது. தோட்ட ஒப்பந்தங்களுக்கு அமைய காணித் துண்டொன்றை வழங்கி சிறுதேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு நிகராக அந்த மக்களை மேம்படுத்துவது குறித்து ஆராயப்படுகிறது.
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம். அதன்பின்னர் மலையக தமிழ் மக்களதும், முஸ்லிம் மக்களதும் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து, இந்த நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி, முன்நோக்கிப் பயணிக்க வேண்டும். இந்தப் பயணத்திற்கு நாம் தயாராக வேண்டும். நீண்ட காலமாக நாம் துன்பங்களை எதிர்கொண்டோம். எனினும், இன்று வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு வருகிறோம். இந்த வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு, பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
நாடு நெருக்கடியை எதிர்கொண்ட போது இந்தியாவினால் வழங்கப்பட்ட உதவிகளுடன் முன்நோக்கிப் பயணிக்க முடிந்தது. இந்த உதவிகள் கிடைத்திருக்காவிட்டால், எம்மால் முன்நோக்கிப் பயணித்திருக்க முடியாது. எனவே, நாம் இந்தியாவுடனான பொருளாதார உறவுகளை மேலும் பலப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். என்றார்.