
ஹரீனுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்
“இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி” என இந்தியா சென்று அறிவித்து தேச துரோக குற்றத்தை செய்துள்ள அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டுமென பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் சுயாதீன எதிரணி எம்.பி.யுமான உதய கம்மன் பில வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமயவின் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு வலியுறுத்திய அவர் மேலும் கூறுகையில்,
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, கடந்த 12 ஆம் திகதி இந்தியாவில் இடம்பெற்ற உயர்மட்ட நிகழ்வில் கலந்து கொண்டு இந்தியாவை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக “இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி” என்று அறிவிப்பு செய்துள்ளார்.
இது இலங்கையின் இறையாண்மையின் சுயாதீனத்தை நேரடியாக மீறும் குற்றம்..நாட்டின் சுயாதீனத்தன்மையை பாதுகாப்பதாக மக்கள் பிரதிநியாக செய்து கொண்ட பதவிப் பிரமாணத்தை அப்பட்டமாக அவர் மீறியுள்ளார். ஆகவே அமைச்சுப் பதவி வகிப்பதற்கு ஹரீன் பெர்னாண்டோவுக்கு எந்தத் தகுதியும் கிடையாது.
எமது நாட்டை இன்னொரு நாட்டுடன் இணைக்க நடவடிக்கை எடுப்பது தேசத் துரோகக் குற்றம். இலங்கை தண்டனை சட்டக் கோவைக்கு அமைய தேசத் துரோக குற்றத்துக்கு மரண தண்டனை வழங்கப்படும்.எனவே “இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி” என இந்தியா சென்று அறிவித்து தேச துரோக குற்றத்தை செய்துள்ள அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றார்.