
கச்சதீவைக் கேட்பது ஏற்புடையதல்ல
இலங்கைக் கடற்பரப்பினுள் இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழையும் போது அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுத்தால், அதற்காக அவர்கள் கச்சதீவைக் கோருவது ஏற்புடையதல்ல என இராஜாங்க அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
எனினும், தமிழ் நாட்டிலும் இந்திய பாராளுமன்றிலும் இந்திய கடற்றொழிலாளர்களின் கைதுக்கு எதிராக கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டதுடன், கச்சதீவை மீளக் கோரும் கருத்துக்களும் வலுப் பெற்றிருந்த நிலையில் இது தொடர்பில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானிடம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இது இரண்டு நாடுகளுக்குமிடையிலான பிரச்சினையாகும். இருந்தாலும் இரு நாடுகளும் ஒற்றுமையாகச் செயற்பட்டு இந்தப் பிரச்சினைக்குரிய தீர்வைக் காண வேண்டும்.
இந்திய கடற்றொழிலாளர்கள் இவ்வாறு இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைவதால் இலங்கை கடற்றொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக தமிழ் நாட்டையும், எம்மையும் எடுத்துக் கொண்டால் நாம் மொழியாலும் ஒன்றுபட்டவர்களாகக் காணப்படுகின்றோம்.
அந்த அடிப்படையில் உண்மைத் தன்மையை உணர்ந்து எமது கடற்றொழிலாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு இந்திய கடற்றொழிலாளர்களும் இதனைப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்.
தொடர்ந்தும் இணக்கமாக நாமும் இந்தியாவும் சகோதர பாசத்துடன் செயற்படும் வகையில் அவர்களுடைய கருத்துக்களும் எமது எதிர்பார்ப்பாகவும் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.