
இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்க வலியுறுத்தி யாழில் இந்திய துணைத் தூதரகம் நாளை முற்றுகை
இந்தியா மீனவர்களின் எல்லை தாண்டிய அத்துமீறிய மீன்பிடியை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி யாழ் இந்திய துணை தூதரகத்தை நாளை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட மீனவ அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தனர்.
யாழ் மாவட்ட கிராமிய கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், சமாசங்கள் மற்றும் சம்மேளங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்ட இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்கள் மேலும் கூறுகையில்,
எமது கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்களில் அத்துமீறல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.எமது வளங்கள் நாளுக்கு நாள் தொடர்ச்சியாக சூறையாடப்படும் நிலையில் எமது வாழ்வாதாரங்களும் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருகின்றன.
நாங்கள் பல தடவைகள் இலங்கை அரசாங்கத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் கோரிக்கை விடுத்தோம் எமக்கு உங்கள் உதவிகள் வேண்டாம் எமது வளத்தை இந்திய மீனவர்களிடம் இருந்து பாதுகாத்து தருமாறு பல தடவைகள் கோரிக்கை விடுத்தோம் ஆனால் அது நடைபெறவில்லை.
தற்போது இராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள் தமது மீனவர்கள் வாழ்வாதாரத்துக்காக இலங்கை கடற்பரப்புக்கு சென்றார்கள் கைது செய்து விட்டார்கள் விடுவிக்குமாறு கோரிக்கை விடுகிறார்கள்.
நாங்கள் அவர்களிடம் ஒன்றை கூற விரும்புகிறோம் நீங்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி வருவது பாரிய குற்றம் மட்டுமல்லாது எமது மீனவர்களின் வாழ்க்கையை அழிக்கிறீர்கள்.
ஆகவே இந்திய மீனவர் மீனவர்களின் வருகையை நிறுத்துமாறு கோரி 20 ஆம் திகதி யாழ் இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளோம்.
இந்திய அரசு நினைத்தால் இந்திய-இலங்கை கடல் எல்லையில் இந்திய கடற்படையை நிறுத்தி இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்குள் நுழைவதை தடுக்க முடியும். ஆனால் அவர்கள் அதனை செய்ய வில்லை. அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கள் கடல் வளத்தை மட்டுமன்றி எமது வலைகளையும் அறுத்தெறிகின்றனர் .எனவே இவர்களின் அத்துமீறல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் இல்லாது விட்டால் எமது பகுதிக்குள் நுழையும் இந்திய ரோலர்களை தீயிட்டு எரிப்போம் என்றனர்.