
நிறைவேற்று ஜனாதிபதி முறை நீக்கம்; மகிந்த தரப்பின் புது நிபந்தனை
பிரதமர் தலைமையிலான அரசியல் கட்சியொன்று பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பெறும் தேர்தல் முறைமை நாட்டில் அறிமுகப்படுத்தப்படும் வரை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கத்திற்கு ஆதரவளிக்கப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ தலைமையிலான பொதுஜனபெரமுன தெரிவித்துள்ளது.
தற்போதைய தேர்தல் முறையின் கீழ் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதை எதிர்ப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகரகாரியவசம் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கிய பின்னர் தற்போதைய தேர்தல் முறைமையின் கீழ் பாராளுமன்ற தேர்தலை நடத்தினால் எந்க கட்சியாலும் தெளிவான பெரும்பான்மையை பெறமுடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் நாட்டின் தலைவரான பிரதமர் பல அரசியல் கட்சிகளின் ஆதரவை கோரி ஆட்சியமைக்கவேண்டும் என தெரிவித்துள்ள சாகர காரியவசம் அவ்வாறான அரசாங்கம் தனக்கு ஆதரவளிக்கும் கட்சிகளின் விருப்பத்தின் அடிப்படையிலேயே ஆட்சி செய்யவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டை பொதுஜனபெரமுன எப்போதும் கொண்டுள்ளதுஎன தெரிவித்துள்ள சாகரகாரியவசம் அதற்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தல் முறையை மாற்றியமைக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைகாரணமாக மாகாணசபைகள் முறைகள் போன்றவற்றினால் நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுவதில்லை என்பது உண்மை எனவும் குறிப்பிட்டுள்ள அவர் நிறைவேற்று அதிகாரஜனாதிபதி முறையின் கீழ் அவைகள் ஏதோ ஒருவிதத்தில் கட்டுப்படுத்தப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.