நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை தேர்தலுக்கு முன்னர் ஒழிப்பதில் தீவிரம்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை தேர்தலுக்கு முன்னர் ஒழிப்பதில் தீவிரம்

ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என்ற விசேட கலந்துரையாடல் அரசாங்கத் தரப்புக்கும் சிவில் அமைப்புக்களுக்கும் இடையில் இடம்பெற்று வருவதாகவும், அதனை எந்தக் கட்சியாலும் எதிர்க்க முடியாது என்பதே சிவில் அமைப்புக்களின் வாதமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதற்காக பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு பேரின் சம்மதத்தைப் பெறுவது பிரச்சினையல்ல என சம்பந்தப்பட்ட தரப்பினர் இந்தக் கலந்துரையாடலில் வலியுறுத்தியுள்ளதாகவும் அறியமுடிகிறது.

பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு பெரும்பான்மை மக்களின் அனுமதி பெறப்படும் என ஜனாதிபதி நம்பிக்கை கொண்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் மார்ச் மாதம் வரை நாட்டில் ஓரளவு ஸ்திரத்தன்மை கட்டியெழுப்பப்படும் எனவும் அதன் பின்னரே சமூக உரையாடலை ஆரம்பிக்க வேண்டும் என இந்த சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐ.தே.க., ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் நிறைவேற்று ஜனாதிபதி பதவியை நீக்குவதாக பல ஜனாதிபதி தேர்தல்களில் வாக்குறுதிகளை வழங்கியுள்ளதாகவும், எனவே இதனை எதிர்க்கும் திறன் அவர்களுக்கு இல்லை எனவும் தெரியவந்துள்ளது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட்டு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுமா? இல்லையெனில் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்படுமா என்ற நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ள நிலையில் இதுவே கடைசி ஜனாதிபதித் தேர்தலாக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் பிரேரணைக்கு தமது கட்சி ஆதரவளிக்கும் எனவும் இது தொடர்பான பிரேரணை ஒன்றை கொண்டு வருவதற்கான ஆயத்தம் இடம்பெற்றுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எனினும் ஜனாதிபதி தேர்தலை உரிய திகதியில் நடத்தி அதன் மூலம் பெறப்படும் மக்கள் ஆணையை பயன்படுத்தி ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்கும் பிரேரணையை நிறைவேற்ற வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )