வட்டுக்கோட்டை பொலிசாரால் எனது உயிருக்கு ஆபத்து; யாழ்.பல்கலை.மாணவன் முறைப்பாடு

வட்டுக்கோட்டை பொலிசாரால் எனது உயிருக்கு ஆபத்து; யாழ்.பல்கலை.மாணவன் முறைப்பாடு

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிசாரின் தாக்குதலுக்குள்ளான யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் கருணாகரன் நிதர்ஷன் , தனது உயிரை காப்பாற்றுமாறு கோரி இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.

வட்டுக்கோட்டை கொட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த 27 வயதான மாணவனே இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

இதைத் தொடர்ந்து அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

இன்று(நேற்று) காலை யாழ் பல்கலைக்கழகத்திற்கு வீட்டிலிருந்து புறப்பட்டேன்.இவ்வேளையில் சித்தன்கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்றுவிட்டு திரும்பி வந்த போது வட்டு.இந்துக் கல்லூரிக்கு அருகில் நின்ற பொலிசார் வழிமறித்தனர்.

முதலில் வழிமறித்த போது எதற்காக நிற்காது சென்றாய் என பொலிசார் கேட்டனர்.

போக்குவரத்து பொலிசார் இல்லை என்பதாலும் அவசரமாக செல்லவேண்டியிருந்ததாலும் சென்றேன் எனக் கூறினேன். இந்நிலையில் திடீரென அங்குவந்த சிவில் உடை தரித்த பொலிசார் வீதியில் வைத்து என்னை கடுமையாகத் தாக்கினர். இதனை காணொலியில் எடுத்தேன்.

இதனால் கோபமடைந்த அவர்கள் எனது தொலைபேசியியையும் பறித்து என்னை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள அறை ஒன்றுக்கு கொண்டு சென்றனர்.

அந்த அறையினுள் பொலிசார், எனது காலை விரித்து தலைகீழாகத் தூக்கி அடித்தனர்.

அவ்வாறு அடித்து கொண்டே எனது கைத் தொலைபேசியில் உள்ள காணொலியை அழிப்பதற்கு தொலைபேசி கடவுச்சொல்லை கேட்டனர். நான் கூற மறுத்தேன். இதனால் தொடர்ந்து தாக்குதல் நடாத்தினர்.

நான் பல்கலைக்கழக மாணவன், போக்குவரத்து விதிகளை மீறியிருந்தால் எனக்கு தண்டம் விதியுங்கள். இல்லை நீதிமன்றம் அனுப்புங்கள் எனக் கூறிய போதும் அடித்தனர்.

இதனால் எனக்கு சுவாசிக்க பிரச்சினை ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக என்னை வெளியில் கொண்டு வந்து அமர்த்தினர். அவ்வேளையில், வீதியில் என்னை பொலிஸார் அடித்த செய்தி கேட்டு எனது தாயார் அங்கு வந்தார்.

இதி நேரம் வீதியில் என்னை பொலிஸார் தாக்கியபோது,அங்கு கடை ஒன்றில் இருந்த சிசிரிவி காணொலியை அழிப்பதற்காக பொலிஸார் அனைவரும் அங்கு சென்று விட்டனர்.

அவர்களது அடிக்கு பயந்திருந்த நான், அலெக்ஸ்க்கு இங்கு நடந்த சம்பவத்தை நினைத்து பயத்தில் ஓடி வந்து விட்டேன்.

தற்பொழுது மனித உரிமை ஆணைக்குழுவில்,நடந்தவை பற்றி முறைப்பாட்டினை பதிவு செய்கின்றேன்.

இன்னுமொரு அலெக்சாக என்னை வட்டுக்கோட்டை பொலிசார் கொன்று விடுவார்களோ என்ற பயத்திலேயே ஓடி வந்தேன் .எனக்கு ஏதாவது நடந்தால் வட்டுக்கோட்டை பொலிசாரே முழுமையான பொறுப்பினையும் ஏற்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )