
இலங்கைக்குச் செல்லுங்கள்; ஜெய்சங்கர் அறிவுரை
” அடுத்த முறை நீங்கள் விடுமுறை எடுக்க விரும்பினால், இலங்கைக்கு செல்லுங்கள் என்பது உங்களுக்கான எனது முதல் அறிவுரை. இதில் நான் தீவிரமாக இருக்கிறேன். தயவு செய்து இலங்கைக்கு செல்லுங்கள். உங்கள் அனைவருக்கும் இதை சொல்கிறேன்..”என்று மும்பாயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்
“நான் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தேன் , எரிபொருள் வரிசைகள், உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறையை நேரில் பார்த்தேன். அந்தத் தருணத்தில் அவர்களுக்கு உதவ முன்னோக்கி வந்த ஒரே நாடு இந்தியாதான் ” என்று அமைச்சர் ஜெய்சங்கர், தனது இலங்கை பயணத்தின் போது அவதானித்த மோசமான சூழ்நிலைகளை விபரித்திருக்கிறார்
இலங்கையின் பொருளாதாரக் கொந்தளிப்பான நிலைமை குறித்து உலகளாவிய அலட்சியத்திற்கு மத்தியில், இந்தியா ஒரு உறுதியான நட்பு நாடாக வெளிப்பட்டு, இலங்கை மக்களிடம் கணிசமான பாராட்டைப் பெற்றுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
இலங்கையின் பொருளாதார சவால்களுக்கு மத்தியில் கொழும்புக்கு இந்தியா வழங்கும் உதவியின் முக்கியத்துவத்தையும் அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார் .
நெருக்கடியின் போது, இந்தியா இலங்கைக்கு சுமார் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவியை அளிப்பதற்கு உறுதியளித்தது, இது சர்வதேச நாணய நிதியம் வழங்கிய உதவியை விட அதிகமாகும்.
“அவர்கள் நீண்ட காலமாக சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். நாணயநிதியத்தின் உதவி முதலில் வந்திருக்க வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் பொதி 3 பில்லியன் டொலருக்கும் குறைவாக இருந்தது,” என்று அவர் குறிப்பிட்டார்.
இலங்கைக்கான இந்தியாவின் உடனடி மற்றும் கணிசமான உதவி சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை விட 50% அதிகமாக இருப்பதாக அமைச்சர் ஜெய்சங்கர் கோடிட்டுக் காட்டினார்.
அமைச்சர் ஜெய்சங்கரின் கருத்துக்கள், இந்தியாவுக்கு எதிராக அண்டை நாடுகளின் குற்றச்சாட்டுகள் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் வெளிப்பட்டுள்ளது.
பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் ஒத்துழைப்பைமேம்படுத்துவதில் இந்தியாவின் செயல்திறன் மிக்க நிலைப்பாட்டையும் மேலும் விளக்குவதாக அமைந்துள்ளது.