
இந்தியாவுக்கு சீனாவின் அச்சுறுத்தல் முதலில் இலங்கையிலிருந்தே வரும்; வைகோ எச்சரிக்கிறார்
இலங்கையில் சீனாவின் பிரசன்ன அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, இலங்கையுடனான உறவை இந்திய அரசு கையாள வேண்டுமென்று ம.தி.மு.க பொதுச் செயலாளரும் இந்திய பாராளுமன்றத்தின் மேற்சபையான ராஜ்யசபை உறுப்பினருமான வைகோ செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியுள்ளார்
புதுடில்லியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் உரையாற்றிய வைகோ, அம்பாந்தோட்டையில் சீனா துறைமுகம் அமைத்துள்ளது என்றும், சீனாவிடமிருந்து நாட்டுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் தெற்கில் இருந்து முதலில் வெளிப்படும் என்பதை இந்திய அரசு உணர வேண்டும் என்றும் கூறியுள்ளார்
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்துவதாகக் கூறப்படும் தாக்குதல் குறித்து,
அமைச்சர்ராஜ்நாத் சிங்கின் கவனத்திற்கு அவர் கொண்டு சென்றிருந்ததாகவும் இதுவரை 800 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அவர்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்றும் அவரது கட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதென ‘இந்து’ பத்திரிகை குறிப்பிட்டுள்ளது .
அதேவேளை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, “ஒரு பிரச்சினையில் அல்லது மற்றொரு விட யத்தில் வம்பு பேசுகிறார்” என்றும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வைகோ மேலும் குற்றம் சாட்டியுள்ளார்
சுபாஷ் சந்திரபோஸால்தான் நாடு சுதந்திரம் அடைந்தது என்று ரவி கூறியதாக வைகோ தெரிவித்தபோது , ஆளுநர் தனது கருத்தை தெளிவுபடுத்தியதாக பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, தெரிவித்தார்.
“அவரது கருத்துக்கள் அனைத்து பத்திரிகைகளிலும் ஏனைய ஊடகங்களிலும் வெளிவந்துள்ளன. அநேகமாக, அமைச்சர் அவற்றைப் படிக்காமல் இருக்கலாம்” என்று வைகோ கூறியுள்ளார் .
மேலும், இந்திய ஜனநாயகம் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாகவும், ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே மதம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதில் “இந்துத்துவ சக்திகள்” வெற்றி பெற்றால் ஜனநாயகம் அழிந்துவிடும் என்றும் வைகோ கூறியுள்ளார்.

