‘அபே ஜன பல’ கட்சி தலைவர் உள்ளிட்ட ஐவர் சுட்டுக் கொலை பெலியத்தவில் ஹோட்டலுக்கு வெளியே சம்பவம்; 36 வெற்றுத் துப்பாக்கி ரவைகள் மீட்பு ; யுக்திய சுற்றி வளைப்புக்கு மத்தியில் துணிகரம்

‘அபே ஜன பல’ கட்சி தலைவர் உள்ளிட்ட ஐவர் சுட்டுக் கொலை பெலியத்தவில் ஹோட்டலுக்கு வெளியே சம்பவம்; 36 வெற்றுத் துப்பாக்கி ரவைகள் மீட்பு ; யுக்திய சுற்றி வளைப்புக்கு மத்தியில் துணிகரம்

தங்காலை – பெலியத்த பகுதியில் இனந்தெரியாத குழுவொன்றால் நடத்தப்பட்ட சராமாரியான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ‘அபே ஜனபல’ கட்சியின் தலைவர் சமன் பிரசன்ன பெரேரா உள்ளிட்ட ஐவர் உயிரிழந்துள்ளனர்.

தெற்கு அதிவேக வீதியின் பெலியத்தவிலுள்ள வெளியேறும் பகுதிக்கு அருகில் நேற்று திங்கட்கிழமை முற்பகல் 8.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தங்காலை நீதிமன்றத்தில் இடம்பெற்றுவரும் வழக்கு விசாரணையொன்றுக்காக வெள்ளை நிற டிபன்டர் வாகனமொன்றில் சென்றுகொண்டிருந்த போதே இவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அபே ஜனபல’ கட்சியின் தலைவர் சமன் பிரசன்ன பெரேரா உள்ளிட்ட குழுவினர் இந்தப் பகுதியில் வீதியோரத்தில் தமது வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்த ஹோட்டலொன்றுக்கு செல்ல வாகனத்திலிருந்து இறங்கும் போது அங்கு மற்றுமொரு பச்சை நிற வாகனத்தில் வந்த இனந்தெரியாத குழுவினர் அவர்களை நோக்கி சராமரியாக துப்பாக்கிச் சூடுகளை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதன்போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சமன் பிரசன்ன பெரேரா உள்ளிட்ட நான்கு பேர் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலுமொருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

‘அபே ஜன பலய’ கட்சியின் தலைவரான 48 வயதான சமன் பிரசன்ன பெரேரா, இந்துவர பிரதேசத்தை சேர்ந்த 40 வயதான ஹசித சின்சக, பெந்தொட்டையை சேர்ந்த 34 வயதான சமீர மதுசங்க, குருநாகல் பகுதியை சேர்ந்த 37 வயதான புத்திக ராஜபக்‌ஷ மற்றும் தெமட்டகொட பிரதேசத்தை சேர்ந்த 44 வயதான சம்பிக்க ஜயதிலக ஆகியோரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்தில் ரி56 ரக துப்பாக்கியே பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கண்டறிந்துள்ளனர். சம்பவம் நடந்த பகுதியில் இருந்து 36 வெற்றுத் துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் துப்பாக்கிதாரிகள் கெப் வாகனத்தில் வந்ததாக சிலர் கூறுவதுடன் மேலும் சிலர் ஜீப் வாகனமொன்றிலேயே வந்ததாக கூறுவதால் அந்த வாகனத்தை சரியாக அடையாளம் காண்பதற்காக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் அந்த இடத்தில் நீதவான் விசாரணை நடைபெற்றதுடன், உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக தங்காலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்திற்கு என்ன காரணம் என்று நேற்று மாலை வரையில் கண்டறியப்படவில்லை என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தங்காலை குடாவெல்ல பகுதியில் 2018 இல் இடம்பெற்ற கொலை சம்பமொன்றுக்கு பழிவாங்கும் வகையில் இவர்கள் மீது குறித்த இனந்தெரியாத குழுவினர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், அந்த கோணத்திலும் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை சந்தேக நபர்களை தேடி 6 விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவரான அபே ஜனபல’ கட்சியின் தலைவர் சமன் பிரசன்ன பெரேரா, 2022 ஆம் ஆண்டில் தங்காலை பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவமொன்றுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவருக்கு தஞ்சம் வழங்கியதாக அந்தவருடத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியவில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்று கூறப்படுகின்றது.

இதற்கு முன்னர் முன்னாள் பலபிட்டி உள்ளூராட்சி மன்றத் தலைவர் ஸ்டான்லி தப்ரு மற்றும் அவரது மகன்களைக் கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதற்கும் தற்போது சமன் பெரேரா கொலை செய்யப்பட்டதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கின்றதா? என்ற சந்தேகமும் எழுந்துந்துள்ளது.

இதேவேளை யுக்திய நடவடிக்கையின் கீழ் நாடு முழுவதும் பொலிஸார் கடந்த ஒருமாதத்திற்கும் மேலாக சுற்றிவளைப்புகள் மற்றும் வீதிச் சோதனைகளை நடத்தி வரும் நிலையில், இவ்வாறாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )