
அனுரகுமார வென்றதும் உடனடியாக பாராளுமன்றம் கலைக்கப்படும்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதியாக வரவுள்ள அனுரகுமார திஸாநாயக்கவின் முதலாவது அறிவிப்பானது பாராளுமன்றத்தை கலைப்பதாகவே அமையுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.டி.லால் காந்த தெரிவித்துள்ளார்.
கண்டி கரலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர், ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் பொதுத் தேர்தலுக்கு தயாராக வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
இவ்வருடம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறும் என்பதை அனைத்து கருத்து கணிப்பு அறிக்கைகளும் உறுதி செய்துள்ளன. தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறும் என்ற அச்சத்தில் உள்ளூராட்சித் தேர்தலை இந்த அரசாங்கம் ஒத்திவைத்தது.
இந்த வருட ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்க வெற்றி பெறுவார் என்பதில் பல கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு சந்தேகம் உள்ளது. வாக்குப்பதிவு இடம்பெறுமா என்ற சந்தேகமும் எங்களுக்கு இருக்கிறது. ஆனால், பாராளுமன்ற தேர்தலுக்காக மக்கள் காத்திருக்கின்றனர். நிறைவேற்று அதிகாரத்தை செயற்படுத்துவதே ரணிலின் வேலை.
இந்த நாடு 75 ஆண்டுகளாக சுரண்டப்பட்டுவிட்டது. எதுவும் உருவாக்கப்படவில்லை. உலகத்தின் முன் இது ஒரு திவாலான நாடு என்பதை அரசு அதிகாரப் பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் அக்டோபர் மாத இறுதிக்கு முன்னர் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், தேசிய மக்கள் சக்தியால் ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார். இதற்கு இன்னும் ஏழு மாத கால இடைவெளியே உள்ளது. ஒவ்வொருவரும் இதற்கு தினமும் உழைக்க வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் பாராளுமன்றம் உடனடியாக கலைக்கப்படும் என்பதே தேசிய மக்கள் சக்தி தலைவரின் முதல் அறிவிப்பு. தற்போதுள்ள பாராளுமன்றத்துடன் ஜனாதிபதியால் வேலை செய்ய முடியாது. எனவே, பொதுத் தேர்தலுக்கு தயாராக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

