
பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுலிலுள்ளதா?; ஆச்சரியப்பட்ட ஜனாதிபதி
மாவீரர் தின நிகழ்வின் போது மட்டக்களப்பில் இடம்பெற்ற கைது தொடர்பாக ஜனாதிபதியுடன் உரையாடிய போது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டமையை கேட்டு அவர் ஆச்சரியப்பட்டாதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட நால்வரும் நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்ட நிலையில் அவர்களை சந்தித்த இரா.சாணக்கியன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி மாவீரர் தினத்தன்று மிக அராஜகமான முறையில் பொலிஸார் கரவை துயிலும் இல்லத்திற்கு வருகை தந்த நால்வரை கைது செய்துள்ளனர். அதனை தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்ட அடுத்த நாள் நீதிமன்றத்தில் சாதாரண குற்றவியல் சட்டத்தின் கீழ் அல்லாமல் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழே முன்னிலைப்படுத்தியிருந்தனர். அதன் பின்னர் சட்டமா அதிபரின் ஆலோசனை வந்தால் மட்டுமே பிணை வழங்கப்படும் என தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் உரையாடிய போது அவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை கேட்டு ஆச்சரியமடைந்தார். ஆனாலும் அவருக்கு கீழே செயற்படும் பொலிஸாரின் நடவடிக்கையை கேட்டு அவரே ஆச்சரியமடைவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என இரா.சாணக்கியன் குறிப்பிட்டார்.
இவ்வாறான சம்பவம் நடந்திருக்கக்கூடாது. நினைவு கூரலென்பது அனைவரின் உரிமையென சர்வதேச சட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விடயமாகும். சர்வதேச சமூகத்திடம் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தமாட்டோமென தெரிவித்துவிட்டு இங்கு பயன்படுத்துவது ஒருவகையான அடக்குமுறையாகும் எனவும் தெரிவித்தார்.

