
மனித உடல்களை அடக்கம் செய்ய வரி; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் சீற்றம்
அரச வங்கிகளிடமிருந்து பல கோடி ரூபா கடன் பெற்று ,கடனை செலுத்தாத 150 பேருக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காத நிலையில் மனித உடல்களை அடக்கம் செய்வதற்கும் வரி அறவிடுதல் எந்தளவுக்கு நியாயமானது ? அதனால்தான் முறை கேடான வகையில் வற் வரியை அமுல்படுத்த அரசாங்கம் எடுக்க முயற்சியை தோற்கடித்துள்ளோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் கூறுகையில்,
.வற் வரியில் புதிதாக இணைக்கப்படும் 97 பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான பட்டியலை சபைக்கு சமர்ப்பிக்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தினோம்.வற் வரி சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு அதிக அக்கறை கொண்ட அரசாங்கம் வரி தொடர்பான தகவல்களை சபைக்கு சமர்ப்பிக்கவில்லை.97 பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான பட்டியலையும் சமர்ப்பிக்கவில்லை.
அத்துடன் அரச வங்கிகளிடமிருந்து பல கோடி ரூபா கடன் பெற்ற 150 பேரின் பெயர் விபரங்களை பகிரங்கப்படுத்துமாறு நிதியமைச்சரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தேன்.ஆனால் இதுவரை அது தொடர்பான விபரங்கள் கிடைக்கவில்லை.இவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.ஆனால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை அடக்கம் செய்வதற்கும் வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இது எந்தளவுக்கு நியாயமானது .அதனால்தான் பிரதான எதிர்க்கட்சி உட்பட ஏனைய எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டை தோற்கடித்துள்ளோம்
நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளி, பொருளாதார படுகொலையாளிகள் என்று உயர்நீதிமன்றத்தால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்ஸ மஹிந்த ராஜபக்ஸ ,பஷில் ராஜபக்ஸஅஜித் நிவார்ட் கப்ரால், லக்ஷமன். ஆட்டிகல,பி.பி.ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.அவர்கள் சுகபோகமாக வாழ்கிறார்கள்.
பொருளாதார படுகொலையாளிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளவர்களின் குடியுரிமையை பறித்து,அவர்கள் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட வேண்டும் .இதற்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அமைக்க வேண்டும்
ஆனால் எதுவுமே செய்து பொருளாதாரத்தை மீட்கவென மீது வரி சுமத்துவத்தை ஏற்க முடியாது என்றார்.

