ஜெனீவா பிரேரணையிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கும் இலங்கை

ஜெனீவா பிரேரணையிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கும் இலங்கை

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட 30 கீழ் 1 பிரேரணையின் பரிந்துரைகளை செயற்படுத்தாமல் இருந்தாலும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து விடுபட முடியாமல் உள்ளது என வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பால சூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செலவுத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறுதெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ எடுத்த தவறான தீர்மானங்களினால் நெருக்கடிகளை எதிர்கொண்டோம் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.உரம் மற்றும் முஸ்லிம் ஜனாசா தொடர்பில் அவர் எடுத்த தவறான தீர்மானங்கள் இன்று தாக்கம் செலுத்துகின்றன.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியிலும் வெளிவிவகார கொள்கை சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுகிறது.இந்தியா,சீனா உள்ளிட்ட உலக நாடுகளிடம் இணக்கமாகவே செயற்படுகிறோம்.சகல குறைகளையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது சுமத்துவது முறையற்றது.

இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட 30 கீழ் 1 பிரேரணையின் பரிந்துரைகளை செயற்படுத்தாமல் இருந்தாலும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து விடுபட முடியாமல் உள்ளது.நல்லாட்சி அரசாங்கம் .இந்தப் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியது. பின்னர் நல்லாட்சி அரசாங்கத்தின் வெளிவிவகாரத்துறை அமைச்சராக பதவி வகித்த திலக்க மாரப்பன,30 -1 பிரேரணை இலங்கையின் அரசியலமைப்புக்கு முரண் என்று குறிப்பிட்டார். அதனை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ அரசாங்கத்தில் வெளிவிவகாரத்துறை அமைச்சராக பதவி வகித்த தினேஷ் குணவர்தன,30 கீழ் 1 பிரேரணையில் இருந்து இலங்கை விலகுவதாக குறிப்பிட்டார்.இணை அனுசரணை வழங்கலில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டாலும் பாதிப்புக்களில் நீங்கவில்லை.

ஜெனிவா விவகாரத்தை கொண்டு இலங்கையின் வெளிவிவகார கொள்கையை மதிப்பட முடியாது.ஒவ்வொரு நாடுகளின் வெளிவிவகார கொள்கையும் வேறுப்பட்டது.ஆகவே வெளிவிவகார கொள்கையை பிற தரப்பினருக்கு ஏற்றாற் போல் வகுக்க முடியாது.எமது நாட்டின் இறையாண்மை,அரசியலமைப்பு உள்ளிட்ட விடயதானங்களை கொண்டு கொள்கை வகுக்க வேண்டும்.

காணாமல் போனோர் விவகாரம்,இழப்பீட்டுக்கான அலுவலகம் ஆகியவற்றை ஜனாதிபதி ஸ்தாபித்துள்ளார்.அதிகார பகிர்வு விவகாரம் தொடர்பில் தமிழ் தரப்பினர் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் .அதன் மூலம் தீர்வுகளை இனம்காண முடியும் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )