
அனைத்து கட்சிகளும் இணைந்தால் மாகாண சபைக்கு விரைவில் தேர்தல்
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் இணைந்து செயல்படுவதன் மூலம் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்த முடியும் என பிரதமரும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்த்தில் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி., கூறுகையில், மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துமாறு உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனினும் கடந்த எட்டு மாதங்கள் காலதாமதமாகி இன்னும் அந்த தேர்தல் நடத்தப்படவில்லை. நாட்டு மக்கள் தேர்தலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் .எனவே தேர்தல் நடத்தப்படுமா என்பது தொடர்பில் பிரதமர் தெரிவிக்க வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் தினேஷ் குணவர்தன,
தற்போது மாகாண சபை தேர்தலை நடத்துமாறு குரல் எழுப்பும் லக்ஷ்மன் கிரியெல்ல அப்போது அவர் சபை முதல்வராக பதவி வகித்த போது அதற்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். அவர்கள் கொண்டு வந்த சட்டத்தின் விளைவாகவே இன்றும் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாத நிலை காணப்படுகின்றது.
இங்குள்ளவர்கள் ஜனாதிபதியை சந்திக்க செல்லும்போது அது தொடர்பில் தெரிவிக்க முடியும் எனினும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறைமையில் தேர்தலை நடத்த வேண்டும் என்றே அங்கு கேட்கின்றனர்.எவ்வாறெனினும் தற்போது மேற்கொள்ளப்படும் முயற்சிகள் வரவேற்கத்தக்கவை. நாம் அனைவரும் இணைந்து அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்றார்.