
தூக்கி வீசப்பட்டார் விளையாட்டு அமைச்சர்
ஜனாதிபதி ரணில் விக்மரசிங்கவை பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை கடுமையாக விமர்சித்து விசேட உரையாற்றிய நிலையில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தனது அமைச்சுப் பொறுப்புக்களில் இருந்து ஜனாதிபதியால் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர், நீர்ப்பாசன அமைச்சர் பதவிகளில் இருந்து ரொஷான் ரணசிங்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கையொப்பமிட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் ஊடாக தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தின் கீழ் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சராகவும் நீர்ப்பாசன அமைச்சராகவும் ரொஷான் ரணசிங்க நியமிக்கப்பட்டார். ஜூலை 2022 இல் அரசுக்கு எதிரான போராட்டங்களுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட அரசாங்கத்தின் ஒரு பகுதியாக அவர் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு இடையிலான மோதல் நிலைமை காரணமாக இலங்கை அரசியலில் நெருக்கடி நிலை உருவாகியது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு அர்ஜூன ரணதுங்க தலைமையில் இடைக்கால நிர்வாகக்குழுவை விளையாட்டுத்துறை அமைச்சர் நியமித்த பின்னர், ஜனாதிபதிக்கும் விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் இடையிலான உறவில் விரிசல் நிலை ஏற்பட்டது.
இதன் விளைவாக, இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டில் ஊழல் மோசடிகளை அம்பலப்படுத்தியதன் காரணமாக, ஜனாதிபதி தம்மை குற்றஞ்சாட்ட முயற்சிப்பதாகவும் தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் ஜனாதிபதியும் ஜனாதிபதி செயலக பிரதானி சாகல ரத்நாயக்கவுமே பொறுப்பென ரொஷான் ரணசிங்க குற்றம் சுமத்தியதை அடுத்தே பதவி நீக்கம் இடம்பெற்றுள்ளது.