உணர்வுகளிற்கு அணை போட முடியாது

உணர்வுகளிற்கு அணை போட முடியாது

எமக்காக ஒருதுளி நீரும் அருந்தாது உண்ணாநோன்பிருந்து தன்னைத் தற்கொடையாக்கிய தியாகி திலீபனின் 36வது நினைவேந்தல் நிகழ்வானது உலகெங்கும் பேரெழுச்சியுடனும், கண்ணீருடனும் நடந்து முடிந்திருக்கிறது. தாயகத்தில், சிங்கள காடையர்களினதும், அரச புலனாய்வாளர்களினதும், இனவாத பிக்குகளினதும் நெருக்கடிகளுக்கும் தாக்குதல்களுக்கும் மத்தியிலும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது திரண்ட மக்கள் வெள்ளத்துடன் நிகழ்வுகள் அரங்கேறியிருக்கின்றன.

இந்தத் தாக்குதல்கள், நெருக்கடிகள், கைதுகள் என்பன எமக்குப் புதியவை அல்ல. 2009இல் ஒரு பாரிய இனப்படுகொலையை நிகழ்த்தி போரை மௌனிக்கச் செய்த பின்னர், இலங்கை சுமுக நிலைக்குத் திரும்பி விட்டதாகவும், தமிழ் மக்கள் பிரச்சனைகளின்றி வாழ்வதாகவும் வெளியுலகத்திற்குக் காட்ட சிங்கள அரசு பகீரதப் பிரயத்தனம் செய்கிறது.

தமது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், தமக்காக உயிரைத்துறந்தவர்களுக்கு அஞ்சலி செய்வது என்பது ஒரு மனிதனுக்கான தார்மீக உரிமை. இலங்கையில் இந்த உரிமையைக் கொடுக்கக்கூட பயப்பட்டு, உருவப்படங்களையும் நினைவிடங்களையும் சிதைத்து தனது இனவெறியை திருப்திப்படுத்திக் கொள்கிறது சிங்கள அரசு.

இவ்வாறுதான் இவ் வருடமும், திருமலையில் வைத்து திலீபனின் திருவுருவம் தாங்கிய ஊர்தியைத் தாக்குதலுக்கு உள்ளாக்கி மீண்டும் தனது கோர முகத்தைக் காட்டியிருக்கிறது இனவாத சிங்கள அரசு. தியாகி திலீபனின் 36வது நினைவுநாளை முன்னிட்டு பொத்துவில் தொடக்கம் நல்லூர் வரை ஊர்திப் பவனிஒழுங்கு செய்யப் பட்டிருந்தது. இந்த ஊர்தி திருகோணமலையில் கப்பல் துறைமுக சந்தியை அண்மித்தபோது சிங்களக் காடையர்களால் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. வாகனத்தில் இருந்தவர்கள் வெளியே இழுத்து தாக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டிருக்கிறார். இவை அனைத்தையும் கை கட்டி வேடிக்கை பார்த்திருக்கிறார்கள் சிங்கள அரச புலனாய்வாளர்கள்.

ஐநா பொதுச்சபையின் தீர்மானம்பாதிக்கப்பட்ட மக்கள் தாம் நேசித்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்குஉரிமை உண்டு என்று அங்கீகாரம் அளித்துள்ளது. ஆனால்,எங்கள் தேசத்தில் 36 வருடங்களுக்கு முன்னர், தான் நேசித்த மக்களுக்கான நீதி வேண்டி, அகிம்சை வழியில் போராடி உயிர்நீத்த ஒரு உன்னத மனிதனை நினைவு கூரும் உரிமைகூட மறுக்கப்படுகிறது, நினைவு கூருபவர்கள் குறி வைக்கப்படுகிறார்கள் என்றால் இதை விடவும் காட்டுமிராண்டித்தனம் எதுவும் இருக்க முடியாது. நினைவுகூர அனுமதி மறுக்கும் ஒரு நாட்டில் இன, மத நல்லிணக்கம் எவ்வாறு சாத்தியமாகும்? தமிழ் மக்களுக்கு அடிப்படை உரிமைகளையும் தர மறுக்கும் சிங்கள அரசு உலக அரங்கில் கண்டிக்கப்பட வேண்டும், தண்டிக்கப்பட வேண்டும்.

ஒருபுறம் பேரினவாதம் கக்கும் சிங்களக் காடையர்கள், அவர்களை உசுப்பேற்றி விடும் பிக்குகள், இவர்களுக்கு காவலாயிருக்கும் இராணுவ, காவற்துறை,இனக் களையெடுப்பு செய்யும் அரச புலனாய்வாளர்கள் என்று அனைவருக்கும் தமிழர்களை அழிக்கும் அளவில்லாஅதிகாரங்களை கொடுத்துவிட்டு பொருளாதாரப் பிச்சை எடுப்பதற்காக பறந்து திரிகிறார் ரணில்.

போகின்ற இடங்களில் எல்லாம் தமிழர் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும், புலம்பெயர் தமிழர் அமைப்புகளும் எமக்கு உதவ வேண்டும், நாட்டின் பொருளாதார நிலை சீரானால், விசாரணைக் குழு ஒன்றை அமைத்து தமிழ் மக்களின் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவரலாம் என்று தமிழர்களையும் ஒரு காரணியாகக் காட்டி நாடு நாடாக இரக்கும் ரணிலுக்குஜெனிவா அமர்விற்கும் பதில் சொல்லியாக வேண்டும் என்பதும் தெரியும். இவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியிலும் தாயகத்தில் தமிழ் மக்கள் துன்புறுத்தப் படுகிறார்கள் என்றால்சிங்கள அரசிடமிருந்து தமிழ் மக்களுக்கு எந்தநியாயமான தீர்வும் கிடைக்கப் போவதில்லை என்பது வெளிப்படை.

உயிர்நீத்த மறவர்களின் நினைவை மக்கள் மனங்களில் இருந்து அகற்றிவிடமுடியும், அவர்கள் பெயருக்கு இழுக்கு ஏற்படுத்த முடியும் என்று இன்னமும் பகற்கனவு காண்கிறது சிங்களம். இதற்காக பேர்பெற்ற கஞ்சா வியாபாரி சித்தார்த் இப்போது புலிகளால் கொல்லப் பட்டவர்கள் என்ற ஒரு பட்டியலுடன் அரச புலனாய்வாளர்களால் களமிறக்கப் பட்டுள்ளான். இராணுவத்தினராலும் அவர்களின் அடிவருடி ஒட்டுக் குழுக்களாலும் கொல்லப்பட்டவர்களும், நோயினால் இறந்தவர்களும் அப்பட்டியலில் இருப்பதையும், சித்தார்த் யார் என்பதையும் மக்கள் ஏற்கனவே அடையாளம் கண்டுவிட்டனர்.

இவை தவிர, திலீபனிற்கான அஞ்சலி நிகழ்வுகளில் மாணவர்கள் கலந்து கொள்வதும், வருடா வருடம் மாவீரர் நினைவாகவிளையாட்டுப் போட்டிகள், இரத்ததான முகாம்கள் என்பன நடைபெறுவதும் இந்தியத் தூதருக்கு பிடிக்கவில்லையாம். குறிப்பாக வன்னியில் மாணவர்கள் பேரெழுச்சியுடன் கலந்து கொண்டதானது அவரை அதிருப்திக்கு உள்ளாக்கி விட்டதாம். இதனால், கடந்த திலீபன் வாரத்தில் எந்த நிகழ்வுகளுக்கும் அனுமதி மறுத்து இந்தியத் தூதுவரின் கவலையையும் விசனத்தையும் போக்கியிருக்கிறது தேசியக் கல்வி அமைச்சு. மாணவர்களும் எதிலும் கலந்து கொள்ளக் கூடாது என்று தடையுத்தரவும் போட்டுவிட்டது.

இதே கல்வியமைச்சு, இந்தியத் தூதுவர் கலந்துகொள்ளும் கலாசார விழாக்களில் மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று சுற்று நிருபம் அனுப்புகிறது, எமது பிள்ளைகள் யோகா, ஹிந்தி கற்றுக் கொள்ள நிர்ப்பந்திக்கிறது. காந்தி ஜெயந்தி, இந்திய சுதந்திர தினம், வல்லபாய் பட்டேல் பிறந்த தினம் கொண்டாட வேண்டும்நிர்ப்பந்திக்கிறது. இதற்கு ஆதரவாக அரச புலனாய்வாளர்கள் பின்னணியில் நின்று எமது பிள்ளைகளை அச்சுறுத்துகின்றனர்.

இத்தனை தடைகளுக்கு மத்தியிலும் மக்கள் மத்தியில் எழுச்சி நிகழ்வுகள் சிறப்பாக நடைபெறுகின்றன என்றால் எமது பிள்ளைகள் செய்த ஈகையும் அவர்களை வழிநடத்திய ஒரு உன்னத தலைவனும்தான் காரணம். எத்தனை தடைகள் வந்தாலும் எமது உணர்வுகளுக்கு அணை போட முடியாது. தடைகளைத் தகர்த்து எமது அன்புக்குரியவர்களின் பாதையில் பயணிப்போம்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )