
தற்கொலைக்கு தூண்டுவது எது?
நீண்டகாலப் போரினால் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் எமது தாயகப் பிரதேசத்தில்தான் உளவள நிலையங்களும், தற்கொலைத் தடுப்பு மையங்களும் இயங்கி மக்களுக்கு உதவியிருக்க வேண்டும். ஆனால், துரதிஷ்ட வசமாகவோ அல்லது திட்டமிட்ட வகையிலோ இவை எதுவுமே தமிழர் தாயகப் பகுதியில் இல்லை. சிறிலங்காவின் ஏனைய பகுதிகளில் இவ்வாறான நாற்பதிற்கும் மேற்பட்ட மையங்கள் இருந்தும் சிங்களப் பகுதிகளில் கல்வி கற்க சென்ற எமது மாணவர்களுக்கு இவை எதுவும் உதவ முடியாமல் போனதன் விளைவு, மாணவச் செல்வங்களில் சிலரை நாம் இழந்து நிற்கிறோம்.
மாணவர்களின் மன அழுத்தத்திற்கு நாம் எல்லோருமே பொறுப்பு ஏற்கவேண்டும். தற்கொலை என்பது கணப்பொழுதில் முடிவெடுத்து செய்யப்படும் விடயமல்ல என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். தாம் மன அழுத்தத்தால் தவிக்கிறோம் என்பதை பலதடவைகள் தமது செய்கைகளின் மூலம் உணர்த்தியிருப்பார்கள் இவர்கள். தமக்கு மனநலம் சார்ந்த உதவி தேவைப்படுகிறது என்பதன் வெளிப்பாடே இந்த செய்கைகள்.
அவற்றைக் கவனித்து அவர்களுக்கு தேவையான உதவியைப் பெற்றுக் கொடுக்கத் தவறியதும், கவனித்தாலும் மனநலம் சார்ந்த ஆலோசனை பெற்றால் ‘பைத்தியம்’ என்றுவிடுவார்களோ என்று கவலையீனமாக இருந்ததும் இந்த உயிர்கள் பறிபோனதற்கு ஒருவகையில் காரணியாகிறது. இதற்கு சமுகத்திலுள்ள அனைவருமே பொறுப்பேற்க வேண்டும்.
நமது பிள்ளைகளின் மன அழுத்தத்திற்கு சிறு வயதிலேயே அடிக்கல் நாட்டப்பட்டு விடுகிறது. பெற்றோரின் விருப்பங்களாக இவை பிள்ளைகளின் மேல் திணிக்கப் படுகின்றன. தமக்குக் கிடைக்காத, தான் விருப்பப்பட்ட ஒன்றை பிள்ளைகள் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பும், அயலவர் அல்லது தமக்குத் தெரிந்தவர் பிள்ளைகளை விட நமது பிள்ளை ஒருபடி மேலே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களை ‘படி படி’ என்று எந்த நேரமும் வற்புறுத்துவதும் பிள்ளைகளை எப்போதும் ஒரு அழுத்த நிலையிலேயே வைத்திருக்கிறது.
அண்மைக்காலமாக அவை அனைத்தும் அதிகரித்திருப்பதை காண முடிகிறது. புலம்பெயர் தேசத்தில் உள்ளவர்களின் வருகையால் அவர்கள் போன்றதொரு வாழ்க்கையை வாழ வேண்டும் அல்லது நாங்களும் புலம்பெயர் தேசத்திற்குச் சென்று விடவேண்டும் என்ற பேரவாவுடன் ஆரம்பக் கல்வி கற்கும் வயதிலேயே அவர்கள் ஆங்கில மொழிவழிப் பாடசாலைகளில் சேர்க்கப்படுகிறார்கள் அல்லது கட்டாயமாக ஆங்கிலம் படிக்க நிர்ப்பந்தப்படுத்தப் படுகிறார்கள். இங்கேயே பிள்ளைகளுக்கான அழுத்தம் ஆரம்பமாகி விடுகிறது.
தரம் ஐந்தினை குழந்தைகள் எட்டிவிட்டால் போதும்.அந்தக் குழந்தைகளின் வீட்டில் எல்லோருமே ஒரு பெரியபதற்றத்துடன் இருப்பதைப் பார்க்க முடியும். தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்காக பல இடங்களில் விசேட வகுப்புகளுக்கு அனுப்பப் படுவார்கள். அந்த வருடம் முழுவதுமே ‘பரீட்சை வருகிறது படி… படி…’ என்று பெற்றவர்கள் தம்மையும் வருத்தி அந்தக் குழந்தைகளையும் வருத்துகிறார்கள்.
இந்தப் பரீட்சையில் வெற்றி பெறாவிட்டால் வாழ்க்கையே இல்லை என்னுமளவுக்கு அந்தக் குழந்தை தள்ளப்படுகிறது. இதற்கிடையில் அடுத்தவர் குழந்தையுடன் ஒப்பிட்டு, தமது பிள்ளையை கடிந்து கொள்வதும், கொஞ்சம் குறைந்து விட்டார் என்று எண்ணினால் உடனே வேறொரு ‘ரியூசன்’ ஒழுங்கு செய்வதும் நடக்கும்.
இதனால் குழந்தைகளிற்கிடையில் நட்பும் ஒற்றுமையும் வளருவதற்குப் பதிலாக பொறாமையும் காழ்ப்புணர்ச்சியும் வளருவதைப் பார்க்க முடிகிறது. விளையாட்டாக கழிய வேண்டிய பிள்ளைகளின் பருவம் மூடிய சுவர்களினுள் புத்தகங்களுடன் கழிவது வேதனையானது. இதனால்தானோ என்னவோ அந்த வயதிலேயே அதீத கண்டிப்புடன் இருக்கும் பெற்றோரில் இருந்து மனதளவில் அவர்கள் சற்றுத் தள்ளிப் போவதையும் பார்க்க முடிகிறது. பரீட்சையில் வெற்றி பெற முடியா விட்டால் பரவாயில்லை, இதையும் தாண்டிய ஒரு அற்புதமான வாழ்க்கை இருக்கிறது என்றுசொல்லி வளர்க்கப்படாததன் விளைவு அவர்களால் தோல்வியைத் தாங்க முடிவதில்லை.
அண்மையில், ‘இலங்கையில் ஒரு இலட்சத்து ஐம்பத்தாறாயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் விடுவிக்கப்பட்டார்கள்’ என்ற தலைப்பிலான ஒரு முகநூல் பதிவு எல்லோர் மனங்களையும் உலுக்கியிருக்கும். ‘ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை நிறைவடைந்தது, ஒருவருட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்’என்பதாக அந்த செய்தி தொடர்ந்தது. இதைவிட அழகாகஅண்மைய நிலையை எடுத்துரைக்க முடியாது.
பல்கலைக்கழகத்தில் நுழைவதுதான் எமது ஒரே இலட்சியம் என்ற நோக்கோடு வளர்க்கப்படுவதனால் வயது ஆக ஆக பிள்ளைகளின் சுமையும் அதிகரிக்கின்றது. சமுகச் சீர்கேடுகளான போதைவஸ்துகள், கசிப்பு போன்ற குடி வகைகள் ஒருபுறம், அதீத கண்டிப்புப் காட்டுவதாக எண்ண மாணவர்களை அடித்துத் துன்புறுத்தும் ஒரு சில ஆசிரியர்கள் இன்னொரு புறமுமாக இவற்றைக் கடந்து கல்வி நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளனர் எமது மாணவர்கள்.
உண்மையாகவே மாணவ நலனுக்காகப் பாடுபடும் நல்லாசிரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள்தான் மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து வழிகாட்டுகின்றனர். ஆயினும், அந்த ஆசிரியர்களின் நியாயமான கற்பித்தல் முறைக்கு மதிப்பளிப்போர் குறைவாகவே உள்ளனர்.
மாணவ மாணவியரிடம் தகாத முறையில் பாலியல் சீண்டல்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் சிலரினாலும் மாணவர்கள் வெளியில் சொல்ல முடியாமல் தமது மன உளைச்சலை தமக்குள்ளே பொத்திப் பொத்தி வைத்திருந்து தம்மை வருத்துகின்றனர். தமது பிள்ளைகளின், உறவினரின் அல்லது அயலவரின் நடவடிக்கையில் ஏற்படும் மாற்றத்தை அவதானித்து உடனே தீர்க்க முயன்றால் பிள்ளைகள் இவ்வாறு மன உளைச்சலில் அவதிப்பட வேண்டியதில்லை.
எல்லாவற்றிலும் முக்கியமானதாக, நாம் நமது பிள்ளைகள் சொல்ல வருவதைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும். எதுவாயினும் எங்கள் பெற்றோரிடம் சொல்லலாம் என்ற நம்பிக்கை, துணிச்சல் பிள்ளைகளுக்கு எழ வேண்டும். அவர்கள் என்ன படிக்க விரும்புகிறார்கள், என்னவாக விரும்புகிறார்கள் என்பதை பிள்ளைகளுடன் பேச வேண்டும். அவர்களுக்காக நாங்கள் முடிவெடுப்பதும், மற்றவர்கள் முன்னால் கௌரவத்திற்கு காட்டுவதற்காக என்று பிள்ளைகள் விரும்பாத பாடங்களை பெற்றோரே தெரிவு செய்வதும் பின்னாளில் மேற்படிப்பை அவர்கள் தொடர முடியாமல் தவித்து மன உளைச்சலுக்குள்ளாக காரணமாகின்றன.
பல்கலைக்கழகம் ஒரு மாயப் பிம்பமாக மாணவர்கள் மனதில் எழுப்பப்படுகின்றது. மிகக் கடினமாக உழைத்து பல்கலைக்கழகம் சென்றுவிட்டால், அதன்பின் கஷ்டப்படத் தேவையில்லை என்ற எண்ணப்பாங்கு வளர்க்கப்பட்டு விடுகிறது. தரப்படுத்தலைத் தாண்டி ஒவ்வொரு தமிழ்மாணவனும் பல்கலைக்கழக அனுமதி பெறுவதற்கு கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. அங்கு சென்றுவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்ற எண்ணத்துடன் படித்து பல்கலைக்கழகம் புகுந்த பலரால், மேற்படிப்பிற்கு இன்னும் அதிகமாக கஷ்டப்பட்டு படிக்க வேண்டியிருக்கும் என்பதை அனுபவரீதியாகப் பார்த்து சீரணிக்க முடிவதில்லை. அவர்களில் சிலர் விரக்தியின் விளிம்பிற்கே தள்ளப்பட்டு விடுகிறார்கள்.
பாலியல் சீண்டல்கள், காதல் தோல்வி, உயர் கல்வியின் அழுத்தம், தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாத மனோபாவம், பரீட்சை பயம், சமுக தொடர்பின்மை, சகிப்புத்தன்மை அற்ற நிலை, தவறான ‘வீடியோ’ விளையாட்டுகள் என்பனவற்றுடன் வீட்டுச் சூழலைக் கடந்து பல்கலைக்கழகம் என்ற ஒரு புதிய உலகத்தினுள் பிரவேசிப்பதை தாங்கிக் கொள்ள முடியாமை என்று பலவிதமான மனவுளைச்சலை எமது பிள்ளைகள் சந்திக்கிறார்கள்.
இலங்கையில் 10 வயதிற்கும் 24 வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர் யுவதிகளில் 39% ஆனோர் மனவுளைச்சலில் அவதிப் படுவதாக புள்ளிவிபரங்கள் சொல்லுகின்றன. சிறுவயதிலிருந்தே பிள்ளைகளின் திறன்களைக் கண்டறிந்து வளர்த்துவிடல், விளையாட்டு, சமுக சேவைகளில் ஈடுபடுத்துதல் என்பன கட்டாயமாக்கப்பட வேண்டும். பிள்ளைகளின் விருப்பு வெறுப்புகளை செவிமடுப்பதும் அவர்கள் விரும்பும் கல்வியைத் தொடர அனுமதிப்பதும் அவர்கள் நிம்மதியான, சந்தோசமான வாழ்க்கையைத் தொடர வழிவகுக்கும்.
எல்லாவற்றிலும் முக்கியமானதாக அவர்களை வெற்றி – தோல்வி இரண்டையும் ஏற்று வாழப் பழக்க வேண்டும். கைவிட்டுப் போன ஒன்றை எண்ணி மன உளைச்சலுக்கு ஆளாகாமல், இன்னும் வாழ வேண்டிய ஒரு அற்புதமான உலகம் உங்கள் முன்னே விரிந்து கிடக்கிறது, அங்கே அவர்கள் விரும்பித் தேர்ந்தெடுக்கக் கூடிய ஆயிரமாயிரம் வழிகள் இருக்கின்றன என்று சொல்லி வளருங்கள். அவர்களை ஒரு கொதிகலன் போல கொதிநிலையில் வைத்திருப்பதை தவிர்ப்போம்.
தற்கொலை ஒருபோதுமே எதற்கும் தீர்வாகாது. இவ்வளவு பிரச்சனைகளைக் கடந்து வந்தவர்கள் நாங்கள்.. இன்னமும் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கத் தயாராக இருப்பவர்கள். சமுகமாக நின்று எதிர்கொண்டு, எங்கள் இளைய தலைமுறையிரைப் பாதுகாப்போம்.
-பாரி.