
இஸ்ரேலில் கடும் யுத்தம்; இரு இலங்கையரை காணவில்லை
இஸ்ரேலுக்கும் ஹமாஸு க்கும் இடையில் இடம்பெற்று வரும் மோதல்களில் இரு இலங்கையர் காணாமல் போயுள்ளதாகவும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
காணாமல் போனவர்களில் பெண்ணொருவர் தொடர்பான தகவல்களைக் கண்டறிய சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அறிவிக்கவுள்ளதாகவும் இஸ்ரேலில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வாழ்ந்து வருவதாகவும் இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
அவர்களில் பெரும்பாலோர் டெல் அவிவ், ஜெருசலேம் மற்றும் ஹைஃபாவின் தலை நகரங்களில் வாழ்கின்றனர்.
இதேவேளை, காசா பகுதியில் இடம்பெற்ற மோதலில் இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், மற்றுமொரு இலங்கையர் காணாமல் போயுள்ளதாக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் தூதரகத்துடன் இணைந்து செயற்பட்டு வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், 0094-716640560 என்ற இலக்கத்திற்கு வாட்ஸ்அப் ஊடாக தகவல்களை அனுப்ப முடியும்.
இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர் தொடர்பில் தகவல் கிடைக்காவிட்டால் 1989 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அவர்களைப் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்ளுமாறும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.