
தேர்தல் முறை மறுசீரமைப்புக்கு எதிர்க்கட்சி கடும் எதிர்ப்பு
உத்தேச தேர்தல் முறை மறுசீரமைப்புக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்காது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ பாராளுமன்ற தேர்தல் முறைமையில் திருத்தம் செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாராளுமன்றத்தில் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் பெற அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு அவசிமாகும். பொதுத் தேர்தலை ஒத்திவைப்பது அரசாங்கத்தின் தந்திரம் என்பதால், நாங்கள் தேர்தல் முறை திருத்தச்சட்டத்தை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம்.
ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் எதுவும் இல்லாததால், பொதுத் தேர்தலை மட்டுமே அரசாங்கம் ஒத்திவைக்க முடியும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுத் தேர்தலை பிற்போட முயற்சித்து வருகிறார்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு பதவிக்காலத்தை நீடித்துக்கொள்ள பொதுத் தேர்தலை ஒத்திவைக்க பொதுவாக்கெடுப்பை நடத்தினார். ரணில் விக்ரமசிங்கவும் இதேபோன்ற விளையாட்டை விளையாட முயற்சிக்கிறார்“ – என்றார்.