
உரிய நடவடிக்கை எடுக்காததற்கு நீதிபதியே பொறுப்பு அரசாங்கம் அல்ல !
நீதிபதி என்ற ரீதியில் தனக்குள்ள அதிகாரங்களை கொண்டு தனக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு அழுத்தங்கள் பிரயோகித்தவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்காமைக்கு அந்த நீதிபதியே பொறுப்பானவர் என்று நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்
இதேவேளை நீதவான் விடயத்தில் விசாரணை நடத்தும் அதிகாரம் அரசாங்கத்திற்கோ, ஜனாதிபதிக்கோ கிடையாது என்றும் இதனால் இது தொடர்பான பொறுப்புகளை அரசாங்கத்தின் மீது சுமத்த முயற்சிக்க வேண்டாம் என்றும் நீதி அமைச்சர் கூறினார்.
நீதிபதியின் பதவி விலகல் தொடர்பில் சுயாதீன விசாரணையை நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த கோரிக்கை தொடர்பில் பதிலளித்து உரையாற்றும் போதே நீதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது நீதி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு நீதிபதி நாட்டை விட்டு சென்ற பின்னரே நீதிச் சேவை ஆணைக் குழுவுக்கு கடிதம் கிடைத்தது. அவரின் மன அழுத்தம் மற்றும் அவருக்கு இருக்கும் அழுத்தம் காரணமாகவும் அவர் பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார். அவ்வாறு அவருக்கு மன அழுத்தம் இருக்குமாக இருந்திருந்தாலோ அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருந்தாலோ அவர் வெளிநாட்டுக்கு சென்று இங்கே கடிதம் அனுப்ப வேண்டிய அவசியமில்லை.
இதேவேளை நீதிபதியொருவருக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுமாக இருந்தால் அது அரசாங்கத்திடமிருந்தா, எம்.பி.யிடமிருந்தா, சாதாரண நபரிடம் இருந்தா என்பதனை பார்க்க வேண்டியதில்லை. அந்த நீதிபதிக்கு முழுமையான அதிகாரம் அரசியலமைப்பு ரீதியில் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு அழுத்தம் கொடுத்தவருக்கு அழைப்பாணை விடுத்து அழைக்க முடியும். அல்லது பிடியாணையை பிறப்பிக்க முடியும். வழக்கை விசாரித்து தண்டனை வழங்கவும் முடியும். அதேபோன்று மேன்முறையீட்டு மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு அனுப்பி வைக்க முடியும். அவருக்கே அந்த அதிகாரம் உள்ளது. அந்த அதிகாரத்தை அவர் பயன்படுத்தவில்லை என்றால் அதன் பொறுப்பை அவரே ஏற்க வேண்டும்.
அத்துடன் இது தொடர்பான எந்தவொரு பொறுப்புகளையும் அரசாங்கத்தின் மீது சுமத்த முயற்சிக்க வேண்டாம். காரணம் நீதவான் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் தொடர்பான ஒழுக்காற்று நடவடிக்கைகள், நியமனங்கள் மற்றும் நிர்வாகம் அனைத்தும் நீதிச் சேவை ஆணைக்குழுவின் ஊடாகவே நடத்தப்படுகின்றது. அந்த ஆணைக்குழு அரசியலமைப்பு ரீதியில் அமைக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுவாகும். கடந்த காலங்களில் நாங்கள் அதன் சுயாதீனத்துவத்தை பாதுகாக்கும் சரத்துக்கள், ஏற்பாடுகளை உள்ளடக்கியுள்ளோம்.
இதனால் அந்த நீதிபதி தொடர்பில் விசாரணை நடத்தவதற்கு அரசாங்கத்திற்கோ, ஜனாதிபதிக்கோ அதிகாரம் கிடையாது. அந்த அதிகாரம் நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு மாத்திரமே உள்ளது. ஆகவே எவருக்காவது இது தொடர்பில் பிரச்சினைகள் இருக்குமாக இருந்தால் தயவு செய்து நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பி வையுங்கள். அதற்கு உத்தரவிடும் அதிகாரம் எங்களுக்கு கிடையாது. அது தொடர்பில் விளக்கமளிக்கவும் எங்களுக்கு முடியாது. அது தொடர்பான அதிகாரம், பிரதம நீதியரசர் தலைமையிலான அந்த ஆணைக் குழுவுக்கு அனுப்பி அது தொடர்பில் பதிலை பெற்றுக்கொள்ளுங்கள். தேவையென்றால் அந்த ஆணைக்குழு விசாரணை நடத்தி உங்களுக்கு பதிலளிக்கும் என்றார்.