
சிங்கள வாக்குகளைப் பெற தமிழ் பேசும் மக்கள் அழிப்பு தமிழர் பகுதி தேவாலய படு கொலைகளுக்கும்
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலினால் தேவாலயங்களில் கொல்லப்பட்ட மக்களுக்காக தொடர்ந்தும் போராடும்,ஓங்கிக் குரல் கொடுக்கும், சர்வதேச விசாரணை கோரும் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை யுத்த காலத்தில் தமிழர் பகுதிகளிலுள்ள தேவாலயங்களில் தங்கியிருந்த போது படுகொலை செய்யப்பட்ட எமது மக்கள் தொடர்பிலும் உரத்துக்குரல் கொடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான முதல் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு வலியுறுத்திய அவர் மேலும் பேசுகையில்,
ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் ,சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற வேண்டும் என்பதற்காக இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்களை அழிப்பதன் ஊடாக ,அவர்களின் உயிர்களை பணயம் வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது.
இன்று சனல் 4 ஆவணப் படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.அது உண்மையானதா பொய்யானதா என்று சொல்வதனை விட இது தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் என்பதே அனைவரினதும் கருத்தாகவுள்ளது. அந்தவகையில் எமது ஆண்டகை மல்கம் ரஞ்சித்தை பாராட்டுகின்றேன் .கூடுதலாக கிறிஸ்தவ தேவாலயங்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.அது கிறிஸ்தவ,தமிழ் முஸ்லிம் உறவை பிரிப்பதற்கான வாய்ப்பாக பயன்படுத்தப்பட்டதா என்ற கேள்வி இருக்கின்றது. ஆகவே கர்தினால் விடாத முயற்சியாக இது தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டுமென கோருகின்றார் .நாங்களும் அதனைத்தான் கோருகின்றோம். படுகொலை செய்யப்பட்டவர்களில் வெளிநாட்டவர்களும் இருப்பதனால் உள்ளூர் விசாரணையை ஏற்றுக்கொள்ள முடியாது.
எமது கிறிஸ்தவ சமயத்தை சார்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டு அந்த வடுவை இன்றைக்கும் தாங்கிக்கொண்டிருக்கின்ற நிலையில் அந்த மக்களுக்கு எனது அனுதாபத்தை தெரிவிக்கும் இந்த நேரத்தில் அந்த மக்களுக்கு உங்களுடைய குரலும் சர்வதேச விசாரணைக்காக ஓங்கி ஒலிக்கும் இன்றைய நிலையில் நாமும் அதற்கு வலுச் சேர்க்கின்றோம்.
அதேநேரத்தில் எமது கர்தினால் மல்கம் ரஞ்சித்துக்கு ஒரு பணிவான வேண்டுகோளை இந்த உயரிய சபை ஊடாக விடுக்கின்றேன். போர் காலத்திலே எமது பகுதிகளிலுள்ள தேவாலயங்களில் தங்கி இருந்த மக்கள் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்டார்கள். பாடசாலைப்பிள்ளைகள் படுகொலை செய்யப்பட்டார்கள், எமது பிரதேசங்களில் மனித உரிமைகள் மீறப்பட்டன. ஆகவே உங்களுடைய நீதிகோரும்,சர்வதேச விசாரணை கோரும் அந்த விடாப்பிடி என்பது மனித நேயம் என்பது வடக்கு, கிழக்கிலே நடந்த படுகொலைகளுக்கும் தேவை. உங்கள் குரல் எமது பகுதிகளிலுள்ள தேவாலயங்களில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காகவும் உரத்து ஒலிக்க வேண்டுமென வேண்டுகின்றேன்.
முன்னர் எது நடந்தாலும் விடுதலைப்புலிகளின் மேல் போட்டு விடுவார்கள். நடக்கும் சம்பவங்களை தட்டிக்கழிக்கவே விடுதலைப்புலிகள் மீது பழியை போட்டு விடுவார்கள். அந்த வருத்தம் இன்றும் பல பேரிடம் உள்ளது. சம்பவங்களை கிடப்பில் போடுவதற்காக இந்த பழி போடும் வேலையை இனியும் செய்ய வேண்டாம் என்றார்.

